சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியில் தண்ணீர் அளவு உயராததால் சென்னைக்கு குடிநீர் வர இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
சென்னை நகர பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு நாளொன்றுக்கு 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
இந்த தண்ணீர் செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ், சோழவரம், பூண்டி நீர் ஆதாரங்கள் வாயிலாகவும், வீராணம் ஏரியிலிருந்தும், கடல் நீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையங்களிலிருந்தும் பெறப்படுகிறது.
இதில் வீராணம் ஏரிக்கு தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள லோயர் அணைக்கட்டிலிருந்து பிரியும் வாய்க்கால் மூலம் கிடைக்கிறது.
இந்த வாய்க்கால் வீராணம் ஏரியில் இணைகிறது. வீராணத்துக்கு தண்ணீர் வரும் வீராணம் கால்வாய் அணைக்கரை வடவார் தலைப்பிலிருந்து 16 கிமீ தூரத்துக்கு வந்து வீராணம் ஏரியில் சேர்கிறது.
இத்தனை சிறப்புக்குரிய கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு குடிக்க நீர்இல்லை என்பதுதான் கொடுமையிலும், கொடுமை.
தண்ணீரை தேக்கும் அளவுக்கு அணைக்கரைக்கு அப்பால் எங்குமே அணைகள் இல்லை. அணைக்கரையில் 9 அடி தண்ணீர் மட்டுமே தேக்க முடியும்.
நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியை சேர்ந்த சந்தப்படுகை கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அமைந்திருக்கிறது. ஆற்று நீரில் கடல் நீர் புகுவதால் உவர்நீராகி, நிலத்தடி நீரும் உப்புநீராக மாறிவிட்டது.
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் இக்கிராமத்திற்கு இதுவரை குடிநீர் வழங்கவில்லை. இந்நிலையில் மாங்கனாம்பட்டு கிராமத்திலிருந்து நிலத்தடி நீரை மின்மோட்டார் மூலம் எடுத்து குழாய்கள் மூலம் தினந்தோறும் காலை 9.00 மணிவரை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது.
இப்படி வழங்கும் நீர் காவி நீராக இருப்பதால், குடிநீருக்கு பயன்படவில்லை. அந்த நீரை கால்நடைகள்கூட அருந்துவதில்லை. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.