செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது குறித்து அமைச்சர்கள் அவசர ஆலோசனை April 18, 2017




அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ள நிலையில் இது குறித்து விவாதிக்க தமிழக அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர்,  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். வி.கே.சசிகலா அணியைச் சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.  

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இது ஒரு ரகசியக் கூட்டம் இல்லை என்று தெரிவித்தார். அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்தை தாங்கள் வரவேற்பதாகக் கூறிய ஜெயக்குமார், இது குறித்தும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பிரமாணப்பத்திரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இரட்டை இலையை மீட்க வேண்டும் என்பதே அதிமுகவின் அனைத்து தொண்டர்களின் ஒருமித்த எண்ணமாக உள்ளதாகவும் ஜெயக்குமார் கூறினார். 

அதிமுக அம்மா அணியின்  துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவைக் காண பெங்களூரு சென்றிருந்ததால்  கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்று கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம், டிடிவி தினகரனிடம் கலந்தாலோசித்த பின்னரே எந்த முடிவும் எடுக்கப்படும் என்றார்.

Related Posts: