வியாழன், 20 ஏப்ரல், 2017

தென்னிந்தியர்களை கறுப்பர்கள் எனக் கூறியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! April 20, 2017

தென்னிந்தியர்களை கறுப்பர்கள் எனக் கூறியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!


தென்னிந்தியர்களை கருப்பர்கள் என விமர்சித்த தருண் விஜயை முற்றுகையிட்டு, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரகாண்டைச் சேர்ந்த முன்னாள் எம்.பி தருண் விஜய், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தென்னிந்தியர்களை கருப்பர்கள் என விமர்சித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனது கருத்துக்கு அவர் மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில் அம்பேத்கர் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அப்போது அவரை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், நிகழ்ச்சி அரங்கிலிருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், மாணவர்களை வெளியேற்றிய போலீசார், அவர்களை பலகலைக்கழக வளாகத்திலிருந்தும் வெளியேற்ற முற்பட்டனர். அப்போது, தருண் விஜய்க்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டனர். உடனடியாக அவர் வெளியேற வேண்டுமென்றும் வலியுறுத்தினர். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பல்கலைக்கழகத்தில் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளும், பெண் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். பின்னர், ஒருசில மாணவர்களை கைது செய்த போலீசார், அவர்களை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனாலும் மாணவர்களின் போராட்டம் நீடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

நிகழ்ச்சி நடக்கும்போதே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிகழ்ச்சி முடிவதற்கு முன்னரே தருண் விஜய் புறப்பட்டார். அவரை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால், பல்கலைக்கழக வளாகத்தில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Posts: