சனி, 15 ஏப்ரல், 2017

தமிழக அரசின் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்

சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கும் வகையில் ‘‘முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்’’ என்ற அமைப்பு தமிழகம் முழுவதிலும் செயல்பட்டு வருகின்றது.
இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை உறுப்பினர் கட்டணம்/சந்தா மற்றும் நன்கொடை வசூல் மூலமாக நிதியைத் திரட்டுகின்றன. இந்த நிதிக்கு இணையான தொகையினை (MATCHING GRANT)   இரு மடங்காக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சமாக ரூ.20 இலட்சம் வரை ஆண்டுதோறும் தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தச் சங்கங்களின் நிர்வாகப் பணிகளில் அதன் தலைவராக மாவட்ட ஆட்சியர், துணைத்தலைவராக மாவட்ட மகளிர் திட்ட அலுவலர், பொருளாளராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மேலும், உள்ளுர் முஸ்லிம்களிலிருந்து ஒருவர் கவுரவ செயலாளர், 2 கவுரவ இணைச் செயலாளர் கள், 3-பேர் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 9 பேர் செயல்படுகின்றனர்.
தமிழக அரசு, இச்சங்கங்கள் ஒவ் வொரு மாவட்டத்திலும் துவங்கப்படுவதற்காக விதைத் தொகையாக (SEED MONEY) ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கி உள்ளது. விதைத்தொகை மற்றும் அரசின் இணைத்தொகையினை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குனர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
நிதி உதவி
அ) ஆதரவற்ற / ஏழை/ வயதான முஸ்லிம் பெண்களுக்கு உதவித்தொகை வழங்குதல் மற்றும் தேவையான பிற உதவிகள் வழங்குதல் மற்றும் விதவைப் பெண்களின் மறு திருமணத்திற்கு நிதி உதவி செய்தல்.
ஆ) ஆதரவற்ற / ஏழைப் பெண்களுக்கு வியாபாரம், தொழில், கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும் வியாபாரம் தொடங்க (அல்லது) தொழில் செய்ய நிதி உதவி அளித்தல்.
இ) மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் இவர்களுக்கு கிடைக்க உதவி செய்தல்.
ஈ) முஸ்லிம் மகளிர்  மற்றும் குழந்தைகள் கல்வி பயில உதவித் தொகை வழங்குதல் மற்றும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பிற உதவிகள் செய்தல்.
உ) முஸ்லிம் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தி தேவையான பயிற்சிகள் அளித்தல் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பலதரப்பட்ட கடனுதவிகளைப் பெற்றுத் தந்து தொழில்/ வியாபாரம் துவங்க உதவுதல்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இந்த திட்டத்திற்கு தகுதி யானவர்கள், உதவி பெருவதற்கான கோரிக் கையை; வெள்ளைத்தாளில் மனுவாக எழுதி ,3- மார்பளவு புகைப்படங்களுடன், ஜமாஅத் கூட்டமைப்பின் உண்மை சான்று கடிதம், மற்றும் தேவைக்கேற்ப தேவையான ஆதார ஆவணங்களுடன்; மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்  மாவட்டங்களில்   மாவட்ட ஆட்சியர் /மாநில அளவில் இயக்குனர், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம், எழிலகம் விரிவாக்க கட்டிடம், இரண்டாவது தளம், சேப்பாக்கம், 
சென்னை- 600005.

Related Posts: