செவ்வாய், 31 அக்டோபர், 2017

மழை காரணமாக அறுவடை பாதிப்பு; வெங்காய விலை ஏற்றம்..! October 31, 2017

ஓமலூர் வட்டாரத்தில் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் வெங்காயம் நடவு செய்திருந்தனர். 

வெங்காயம் விளைந்து அறுவடைக்குத் தயாராகும் காலத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வெங்காயம் வயலோடு அழுகி விட்டது. இதனால், வெங்காயம் விளைச்சல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஓமலூர் சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காயம் 50 கிலோ எடைகொண்ட மூட்டை 5,000 ரூபாய் முதல் 6,500 ரூபாய் வரை விலைபோகிறது. 

சில்லறை விலையில் கிலோ 100 ரூபாயில் இருந்து 130 ரூபாய் வரை விற்பனையாகிறது. பல்லாரி வெங்காயம் கிலோ 50ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
Image

குடிநீருக்கான ஏரியில் கழிவுநீரை கலக்க முயன்ற அதிகாரிகள்! October 31, 2017

சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவுநீரை விட முயன்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால் அம்பத்தூர், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற வழி தெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவு நீரை அதில் விட முடிவு செய்து ஜேசிபி இயந்திரம் மூலம் கரையை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கரையை அடைத்தனர். கொரட்டூர் ஏரியில் எந்தவொரு கழிவு நீரும் கலக்க விடக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில் அதிகாரிகளின் இந்த செயல் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
Image

சந்திராயன்-2 செயற்கைக்கோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படுகிறது October 9, 2017

நிலவை ஆராய்ச்சி செய்வதற்கான சந்திராயன்-2 செயற்கைக்கோள், அடுத்தாண்டு ஏவப்பட உள்ளதாக, மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதனை தெரிவித்தார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அக்டோபர் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில், விண்வெளி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பின், மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது 2018-ம் ஆண்டு சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் மகேந்திரகிரி இஸ்ரோ மைய வளாகத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு, ஆதித்யா என்ற செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும், 2023-ல் வெள்ளி கோளை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்புவது குறித்து, ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Image

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! October 31, 2017

Image

வடகிழக்கு பருமழை காரணமாகவும் இலங்கையையொட்டி வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. 

சென்னையில்  நேற்று காலை முதலே பெய்யத் தொடங்கிய மழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்நிலையில் இரவிலும் நீடித்த கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் அதிக அளவு தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். மழை காரணமாக நேற்று மாலை கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. 

கனமழை எதிரொலியாக தமிழகத்தில் 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, விழுப்புரம், திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பன்ருட்டி, காட்டுமன்னார்குடி, குமராட்சி உள்ளிட்ட 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். 

பருவமழை எதிரொலியாக சென்னையில் குடைகள் மற்றும் ரெயின் கோட்டுக்களின் விற்பனையும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை பூக்கடை பகுதியில் உள்ள  குடை விற்பனை கடைகளில் நேற்று மக்கள் விதவிதமான குடைகளையும் தங்கள் உடலுக்கு ஏற்ற ரெயின் கோட்களையும் வாங்குவதில் அதிக மும்முரம் காட்டினர். அதிக மழை மற்றும் காற்றை சமாளித்து காற்றுக்கு ஏற்ப தன் வடிவமைப்பை மாற்றி கொள்ளும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள  ரிவர்சபிள் குடைகள் பொதுமக்களின் கவனத்தை அதிக அளவு கவர்ந்தன.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், 300 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டால், அவர்களை உடனடியாக மீட்க 109 படகுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உணவுப் பொருட்களும் தயார் நிலையில் உள்ளதாக கார்த்திகேயன் கூறினார்.

சென்னை மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.  திருவொற்றியூர்,  எண்ணூர்,    புதுவண்ணாரப்பேட்டை,  வண்ணாரப்பேட்டை,  காசிமேடு  ஆகிய  பகுதிகளில்  பலத்த மழை பெய்தது.  இதனால்  சாலையில்  பெருக்கெடுத்து ஓடிய மழை  நீரினால்  வாகன ஓட்டிகள்  சிரமம்  அடைந்தனர். சென்னை மெட்ரோ ரயில் வேலை பணிகளால் குறுகலாகவும்,  குண்டும் குழியுமாகவும் இருந்த சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. 

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும்,  சம்பா சாகுபடியை தொடங்கி உள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில்  தஞ்சாவூர், ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை,  திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி  உள்ளிட்ட இடங்களில் நேற்று  கனமழை பெய்தது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கடந்த இரு தினங்களாக இரவில் மழை விட்டுவிட்டு பெய்துவரும் நிலையில் நீர் நிலைகள் நிரம்ப தொடங்கி உள்ளன. வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளான தெள்ளாறு, கண்டையநல்லூர், நடுக்குப்பம் ஆகிய கிராமங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவது பயிர் செழிக்க உதவுமென  விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

கனமழை எதிரொலியாக நாகை மாவட்டம் பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வயலில் குடை பிடித்தபடி வேலை பார்த்துக்கொண்டிருந்த ராமச்சந்திரன் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி பலியானார்.    

திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. முறையாக பராமரிக்கப்படாமல் இருந்த சாக்கடையில் மழைநீர் புகுந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அதனை மிதித்தபடியே செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. வாகன நெரிசலும் கடுமையாக காணப்பட்டது. 

சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! October 30, 2017

Image


கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளி வகுப்புகளையும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக முடிக்க ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இன்று காலை முதலே சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. 

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என கூறினார். 

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்தார்..

வேலை இல்லா திண்டாட்டம்


திங்கள், 30 அக்டோபர், 2017

சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றம்’ October 27, 2017

Image

ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி தவறு என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை பாப்பன்குளத்தைச் சேர்ந்த காட்டுராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், ஹோமியோபதி படித்த தனது மனைவியை போலி மருத்துவர் என போலீஸார் கைது செய்ததாகவும், அவருடன் தனது இருமாதக் குழந்தையை அழைத்துச் சென்றனர் என்றும், தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், மனைவி, குழந்தையை விடுவிக்க மானாமதுரை நீதித்துறை நடுவருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு முன்பு விசாரணைக்கு  வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரரின் மனைவி ஹோமியோபதி படித்துவிட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததால் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்தார். இதையடுத்து ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி தவறு என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், மனைவி, குழந்தையை விடுவிக்க  மனுதாரர் உரிய நீதிமன்றத்தில் முறையிடலாம், எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

மண்ணெண்ணெய் , பால்டாயில், தூக்குக் கயிற்றுடன் வந்த விவசாயிகள்..! October 27, 2017

Image


பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை வழங்காததைக் கண்டித்து நாகையில், குறைதீர்க் கூட்டத்திற்கு விவசாயிகள் மண்ணெண்ணெய்  பாட்டில், பால்டாயில், தூக்குக் கயிற்றுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாகை மாவட்ட ஆட்சியர் அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டத்திற்கு விவசாயிகள் பலர் மண்ணெண்ணெய் பாட்டில்,பால்டாயில், தூக்கு கயிறுடன் வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த அனைவரையும் காவல் துறையினர்  சோதனை மேற்கொண்டனர். அப்போது மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மாதானம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரை காவலர்கள் கைது செய்தனர். இதையடுத்து  மற்றொரு விவசாயி,  தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். 

இதனால் நாகை மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து விவசாயியை சமாதானபடுத்தும் முயற்சியில் வருவாய் கோட்டச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முற்பட்டனர். நவம்பர் 20 ஆம் தேதிக்குள் பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர். 

இதே போல், தஞ்சையில் பயிர்காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து பாதிக்கபட்ட விவசாயிகள்  குறை தீர்க்கூட்டத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில காவல்துறையை அனுமதிக்ககூடாது எனவும் எச்சரித்தனர். சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி! October 27, 2017

Image
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி, சமீப காலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடைசியாக சில வாரங்களுக்கு முன், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில், ஓய்வுக்காக சிம்லா சென்றிருந்த அவருக்கு, நேன்று திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து வான்வழி ஆம்புலன்ஸ் மூலம், அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது! October 29, 2017


காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது!

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பகத்சிங் என்பவர் சேலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஊத்தங்கரை தாலுக்கா, சிங்காரப்பேட்டை அருகே அம்பேத்கார் நகரை  சேர்ந்தவர் பகத்சிங். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இவர் கடந்த 2002ல் ஊத்தங்கரையில் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தவர். அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். 

இந்நிலையில் தன்னை போலீசார் என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறி சேலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் முன்னிலையில் சரண் அடைந்தார். 

ஏடிஎம் காவலாளியை சுத்தியலால் கொடூரமாக தாக்கிய கொள்ளையன்! October 29, 2017

ஏடிஎம் காவலாளியை சுத்தியலால் கொடூரமாக தாக்கிய கொள்ளையன்!


கோவா தலைநகர் பனாஜியில், வங்கி ஏடிஎம் மையம் ஒன்றில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலரை, அந்த கொள்ளையன் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

சுத்தியலால் அந்த கொள்ளையன் கொடூரமாக தாக்குதல் நடத்தும் காட்சி, கண்போரை பதற வைக்கும் வகையில் உள்ளது. ஒரு வழியாக போராடி, கொள்ளையனிடம் இருந்து சுத்தியலை பறித்த காவலர், திருப்பித்தாக்க முயன்றபோது, கொள்ளையன் தப்பியோடி விட்டான்.

காவலாளியின் இந்த துணிச்சலான நடவடிக்கையால், ஏடிஎம்-மில் இருந்த பணம் தப்பியது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக, கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

பனாஜியில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம், கோவா மக்களை பீதியடைய வைத்துள்ளது.

300 ஏடிஎம் மையங்கள் மூடல்..! October 28, 2017

300 ஏடிஎம் மையங்கள் மூடல்..!


மத்திய அரசு டிஜிட்டல் பண பரிமாற்ற நடைமுறைக்கு முன்னுரிமை அளித்து வருவதால், நகர்புறங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் நகர்புறங்களில் உள்ள ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை பல்வேறு வங்கிகள் குறைத்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 91 ஏடிஎம் மையங்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் 200-க்கும் மேற்பட்ட ஏடிஎம்களும் குறைக்கப்பட்டுள்ளன. 

சனி, 28 அக்டோபர், 2017

​பறவைகளை விரட்ட விவசாயி கண்டுபிடித்த கருவி! October 28, 2017



​பறவைகளை விரட்ட விவசாயி கண்டுபிடித்த கருவி!

இந்தியாவின் வடமாநில விவசாயி ஒருவர் வேளாண் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் பறவைகளை விரட்டக் கையாளும் புதிய யுக்தி இணையதளங்களில் பரவி வருகிறது.

காற்றாடியின் தகடுகளையும், வீணாகக் கிடக்கும் சில உலோகப் பொருட்கள் மற்றும் ஒரு தட்டைப்  பயன்படுத்தி அந்த விவசாயி உருவாக்கியுள்ள ஒரு இயந்திரம் காற்றின் ஆற்றலால் இயங்கக்கூடியது.

காற்று வேகமாக வீசும் பொழுது, அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புச் சங்கிலியின் கண்ணி, அந்த தட்டில் வேகமாகத் தட்டி ஒலி எழுப்பும். 

இது ஒரு மனிதன் வட்டிலைத் தட்டிக்கொண்டே செல்வது போல் தோன்றுவதால் பறவைகள் பயந்துகொண்டு வெகுதொலைவுக்குச் சென்று விடுகின்றன.

சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பு! October 28, 2017

சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பு!


சென்னையில், அரசு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பே சுகாதாரமற்ற நிலையில் உள்ளது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கோஷா அரசு மகப்பேறு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பே மிக மோசமான நிலையில் பராமரிப்பின்றி கொசு உற்பத்தி கிடங்காக காட்சியளிக்கிறது. நுழைவாயிலிலேயே தண்ணீர் தேங்கியும், குப்பைகள் அள்ளாமலும் காணப்படுகிறது. ஆளில்லாத சில வீடுகளின் முகப்புகளிலும், உட்புறங்களும் அதிக குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. 
 
மேலும் குடியிருப்பு வளாகத்தின் பின்புறம் கழிவுநீரும், பிளாஸ்டிக் குப்பைகளும் சில மாதங்களாகவே அள்ளப்படாமல் உள்ளன. மின் மோட்டார் அறை பின்பக்க வீடுகள் என எங்கும் அசுத்தமான நிலையே காணப்படுகிறது. 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். குடியிருப்பில் தங்கியிருப்பவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என்பதால் பேட்டியளிக்க தயக்கம் காட்டுகின்றனர். மருத்துவமனை நிர்வாகமும், மாநகராட்சியும் இதனை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே 
இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்களின் நிலையே சுகாதாரமற்ற முறையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலம்! October 28, 2017

​இனிமேல் மழைக்காலம்!



தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில்  கன மழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்  கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் , வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

ரேஷன் சர்க்கரை விலை அதிரடி உயர்வு! October 28, 2017


ரேஷன் சர்க்கரை விலை அதிரடி உயர்வு!


ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை கிலோ 25 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் பச்சை நிற ரேஷன் அட்டைகள் வைத்துள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 2 கிலோ சக்கரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 காசு விலையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு சர்க்கரை விலையை திடீரென்று கிலோவுக்கு 11 ரூபாய் 50 காசுகள் ஏற்றி நேற்றிரவு உத்தரவிட்டது.  

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 

2016-17ம் ஆண்டில் ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் சர்க்கரையின் அளவு 33,636 மெட்ரிக் டன்னாக உயர்ந்த நிலையில், மத்திய அரசு 10,833 மெட்ரிக் டன் சர்க்கரை மட்டுமே வழங்கியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள சர்க்கரையை தமிழக அரசு வெளி சந்தையில் விலைக்கு வாங்கி விநியோகம் செய்து வருகிறது என்றும், இதற்கு தமிழக அரசு மாதம் 20 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற்று வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 10,833 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு மட்டும் மானியம் கிடைத்ததால் மாநில அரசுக்கு மாதம் 14 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 18.64 லட்சம் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளுக்கு மட்டும் 1,864 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் மத்திய அரசு தரும் மானியம் மாதம் 20 கோடி ரூபாயில் இருந்து 3 கோடியே 45 லட்ச ரூபாயாக குறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு இதனால் மாதம் 108 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என்றும் 33,636 மெட்ரிக் டன் சர்க்கரை விநியோகத்திற்கும் சேர்த்து தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 1,300  கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதனால் நவம்பர் 1 முதல் அந்தியோதயா அன்னயோஜனா பயனாளிகளுக்கு மட்டும் கிலோ 13 ரூபாய் 50 காசுகள் விலையில் சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கிலோ 25 ரூபாய்க்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிச்சந்தையில் 45 ரூபாய்க்கு விற்கப்படும் சர்க்கரையை வாங்கி, அதனை கிலோ 25 ரூபாய்க்கு ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்வதால் அரசுக்கு ஆண்டுக்கு 836 கோடியே 29 லட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக நன்கொடை பெற்ற கட்சிகளின் பட்டியல் வெளியீடு! October 28, 2017

இந்தியாவில் 2015-2016-ம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 2015-2016-ம் நிதியாண்டில் திமுக ரூ.77.63 கோடி  நன்கொடையாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அடுத்தபடியாக, ரூ.54.93 கோடி நன்கொடையாக பெற்று அதிமுக 2-வது இடத்தை பிடித்துள்ளது. 3-வது இடத்தை தெலுங்கு தேசம் கட்சி பிடித்துள்ளது. அந்த கட்சி ரூ.15.97 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே சமயம் திமுக, அதிமுக மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் இ இதேகதுல் முஸ்லிமின் ஆகிய கட்சிகள் தங்களது வருவாயில் 80 சதவீதத்தை செலவு செய்யவில்லை என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகம் செலவு செய்த மாநில கட்சிகளின் பட்டியலில், ஐக்கிய ஜனதா தளம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த கட்சி 2015-2016-ம் ஆண்டில் ரூ.23.46 கோடி செலவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ரூ.13.10 கோடி செலவுடன் 2-வது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி ரூ.11.09 கோடி ரூபாய் செலவுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 32 மாநில கட்சிகளில் 14 கட்சிகள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ஐக்கிய ஜனதா தளம், மற்றும் ராஷ்டீரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் தங்களது வருமானத்தை விட சுமார் 2 மடங்கு செலவு செய்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

news7

ஒரு கிராமத்துக்கே ஒரே பிறந்தநாள் அச்சடித்துக்கொடுத்த ஆதார்! October 28, 2017

ஒரு கிராமத்துக்கே ஒரே பிறந்தநாள் அச்சடித்துக்கொடுத்த ஆதார்!


உத்தரகாண்ட் மாநிலம் கைந்தி என்கிற கிராமத்தில் சுமார் 800 குடியிருப்புகள் உள்ளன. இந்தக்குடியிருப்புகளில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இந்திய ஆதார் மையம் சார்பாக ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஆதார் அட்டை அனைத்திலும், கிராம மக்கள் அனைவருக்கும் ஒரே பிறந்தநாள் அச்சடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்துஅந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைவருடைய ஆதார் அடையாள அட்டையிலும் அவருடைய பிறந்த தேதி ஜனவரி 1ம் தேதி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆதார் மையம், அந்த ஊரில் உள்ள பலருக்கு தாங்கள் பிறந்த தேதியே சரியாக தெரியவில்லை என்றும், பிறந்தநாள் தேதிக்கான முறையான ஆவணங்கள் இல்லை என்றும் எனவே தான் ஒரே தேதி அச்சடித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், கிராமத்தில் பலர் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஆனால் முறையான பிறந்த தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆதார் அடையாள அட்டையில் இது போன்ற தவறுகள் இருப்பதாக செய்திகள் வெளியாவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம், ஆக்ரா அருகேயுள்ள மூன்று கிராமங்களில் வழங்கப்பட்ட ஆதார் எண்ணில் இதே போல, அனைவருக்கும் பிறந்ததேதி ஜனவரி 1ம் தேதி எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த மே மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 250 கிராமவாசிகளுக்கு இதேபோல ஒரே பிறந்தநாள் தேதி அச்சடித்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

​குஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத கடல் ஜுராசிக் புதைபடிமம் கண்டுபிடிப்பு! October 28, 2017

​குஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத கடல் ஜுராசிக் புதைபடிமம் கண்டுபிடிப்பு!


குஜராத் மாநிலம் லோடாய் கிராமத்தில் இந்திய புதைபடிமவியல் ஆராய்ச்சியாளர்கள் மிக முக்கியமான ஆராய்ச்சி முடிவை எட்டியுள்ளனர். அந்த கிராமத்திலிருந்து சுமார் 157-152 மில்லியன் ஆண்டுகள் பழமையான ராட்சத கடல் ஜுராசிக் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள இந்த படிமத்தை பேராசியர் குண்டுபள்ளி வி.பிரசாத் தலைமையிலான குழு கண்டடைந்துள்ளது. இந்த ஜுராசிக் 5.5 மீட்டர் நீளமுடையதாக உள்ளது.

இது, புதைபடிமவியல் ஆராய்ச்சியில் மிக முக்கியமான முன்னநகர்வாக பார்க்கப்படுகிறது. 

இந்த கடல் பல்லியின் காலம் 252 மில்லியன் - 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் டைனோசர்கள் வாழ்ந்தன. இதே காலகட்டத்தில், உலகில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த கடல் பல்லியின் மூலம் டைனோசர் வாழ்ந்த காலத்தில் கடல் பல்லிகளும் வாழ்ந்தன என உறுதிசெய்ய முடிகிறது என அமெரிக்காவில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் புதைபடிமவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்துத்துவத்திற்கு எதிராக எழுதிய எழுத்தாளர் காஞ்சா இலையா வீட்டுச்சிறையில் அடைப்பு! October 28, 2017

இந்துத்துவத்திற்கு எதிராக எழுதிய எழுத்தாளர் காஞ்சா இலையா வீட்டுச்சிறையில் அடைப்பு!


புகழ்பெற்ற தலீத் வரலாற்று ஆய்வாளரும், இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக எழுதிவரக்கூடியவருமான காஞ்சா இலையா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹைதரபாத்தில் தரங்காவில் இருக்கும் அவரது வீட்டில் காஞ்சா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக காஞ்சாவின் ஆதரவாளர்கள் அவர் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விஜயவாடாவில் நடக்க இருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் காஞ்சா இலையா கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார். இதற்கு, ஆர்ய - வைஸ்ய பிராமண ஐக்கிய சங்கம் என்ற சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. 

மேலும், காஞ்சாவின் பொதுக்கூட்டத்திற்கு எதிராக பேரணி நடத்தவும் திட்டமிட்டு பின்னர் கைவிட்டது. காவல்துறை விஜயவாடாவில் பொதுக்கூட்டம், பேரணிகள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆர்ய - வைஸ்ய - பிராமண ஐக்கிய சங்கம் காஞ்சாவின் பொதுக்கூட்டத்திற்கு தடை கோரியது. ஆனால், உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு தடை விதிக்கும் வழிகாட்டல் எதுவும் வழங்கவில்லை.

இந்நிலையில், காஞ்சா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், காஞ்சாவின் Samaajika smugglerlu komatollu" என்ற புத்தகம் வெளியானது. இதில், ஆர்ய வைஸ்ய சமூகங்களை சமூகத்திருடர்கள் என்று காஞ்சா விமர்சித்துள்ளார். இந்நூலுக்கு தடைவிதிக்கக்கோரி உச்சநீதிமன்றம் வரை சென்ற வழக்கில், அக்.15 அன்ரு புத்தகத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், தெலங்கானா - ஆந்திர அரசுகள் கருத்து சுதந்திரத்தை நெரிப்பதாக காஞ்சா விமர்சித்துள்ளார்.

"கனமழை பெய்தால் வடசென்னை மூழ்கும்" October 27, 2017




வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால், எண்ணூர் பகுதியில் செயல்படும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலாலும், நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், வடசென்னை பகுதிக்கு வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. 

சென்னையில் 2015ம் ஆண்டு டிசம்பரில், அடையாறு பாயும் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக ஆற்றுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பருவமழை தீவிரமாகப் பெய்தால், இந்த ஆண்டு எண்ணூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

எண்ணூர் பகுதியில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாம்பல் கொட்டப்படுவதால், மழைநீர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கனமழை பெய்யும் போது வடசென்னை பகுதிகளான அத்திப்பட்டு, தாழங்குப்பம் போன்றவை வெள்ளக் காடாக மாறும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். 

ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொட்டப்பட்டிருக்கும் சாம்பல் கழிவுகளை அகற்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், தற்போது வரை அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய புகாராக இருக்கிறது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தையும், தூர்வாராமல் இருப்பதால், வடசென்னை பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேறி கடலில் கலக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. 

ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்தால் மட்டுமே வடசென்னை மக்கள் தங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

கொள்ளுப் பேரன் திருமணத்தை நடத்தி வைக்கிறார் கருணாநிதி! October 28, 2017


கொள்ளுப் பேரன் திருமணத்தை நடத்தி வைக்கிறார் கருணாநிதி!

தனது கொள்ளுப்பேரனின் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி, சென்னையில் அடுத்த வாரம் நடத்தி வைக்கிறார். 

கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரி தம்பதியரின் மகள் வழி பேரனான மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கும் கடந்த ஜூலை 10ம் தேதி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.  இவர்களின் திருமணம் அடுத்தவாரம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் நடைபெற உள்ளது. 

இத்திருமணத்தை கருணாநிதியும் அவரது மனைவி தயாளு அம்மாளும் நடத்தி வைக்க உள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக தொடர் ஓய்வில் இருந்து வந்த கருணாநிதி, தற்போது குணமடைந்து வருகிறார். பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த கருணாநிதி,  தனது கொள்ளுப் பேரனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! October 28, 2017


மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!


நாடு முழுவதும் பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க ஏதேனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா?  என்பது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

30 தனியார் பொறியியல் கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கழகம் வளாக நேர்முகத் தேர்வு நடத்துவதை எதிர்த்து கரூரை சேர்ந்த நடராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி என். கிருபாகரன் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

மேலும், அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து 
வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

இந்த வழக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளரையும் எதிர்மனுதாராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், நாடு முழுவதும் பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க ஏதேனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கும் 12 கேள்விகளை நீதிபதி எழுப்பினார். அதில், 

இந்தியாவில் எத்தனை பொறியியல் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்? 

அதில் வெற்றிகரமாக படிப்பை முடித்து வெளியேறுபவர்கள் எத்தனை பேர்? 

எத்தனை பொறியியல் பட்டதாரிகள் தற்போது வேலையின்றி தவிக்கின்றனர்? 

அதில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் எத்தனை பேர்? 

தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருப்பதால் கூடுதலாக உள்ள கல்லூரிகள் மூடப்படுமா? போன்ற கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. 

மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். 

பயனீட்டாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ் அப்! October 28, 2017


பயனீட்டாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ் அப்!


பல கோடி பயனீட்டாளர்களின் நீண்ட கால கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது. 

சர்வதேச அளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களுள் வாட்ஸ் அப் செயலி முக்கியபங்குவகிக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப் செயலியையும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் இன்றி, 256 பேர் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் மூலமும் அவர்களுக்கும் செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் தவறான தகவல்களையோ அல்லது தவறான குழுவிற்கு வேறு செய்தியையோ, தகவலையோ மாற்றி அனுப்பிவிட்டால் அதனை நீக்கும் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் நாம் அனுப்பும் தகவலை மற்றவர்கள் படிக்கும் முன்னதாக அதனை நீக்கும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்துவந்தனர். 

இந்நிலையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் கோரிக்கையை நீண்ட நாட்களாக பரிசீலித்துவந்த வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ் அப்பில் அனுப்பும் செய்திகளை நிரந்தரமாக நீக்கும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் நீங்கள் யாருக்காவது தவறான செய்தியை அனுப்பிவிட்டால் அதனை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் டெலீட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் வாடிக்கையாளர் அனுப்பும் செய்தியை பெறும் நபரும் லேட்டஸ்ட் அப்டேட் செய்திருந்தால் மட்டுமே நீங்கள் நீக்கும் செய்தியோ தகவலோ நீக்கப்படும் இல்லையென்றால் அந்த செய்தியை நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அந்த நபர் அதனை பார்த்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்தியை நீக்கும் முறை: 

நீக்கள் அனுப்பிய செய்தியின் மீது நீண்ட அழுத்தம் கொடுத்தால் அதில் “Delete for me and Delete for everyone" என்ற ஆப்ஷன் வரும். அதில் Delete for everyone என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் அனுப்பிய தவறான அல்லது தேவையில்லாத செய்தியை நீக்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

MK Patti : ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை பெறாதவர்கள்

ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை பெறாதவர்கள் , பட்டியலில் உள்ளது , தங்களது முழு தகவலக்கை (குடும்ப தலைவர் புகை படம், குடும்ப உறுப்பினர், பெயர் சேர்த்தால் - நீக்குதல் ) தகவல்களை இலுப்பூர் தாலுகா அலுவலகம் அல்லது நெட் சென்டர் அணுகி பதிவேற்றம் செய்யவேண்டும் இல்லை என்றல் , தங்களுடைய குடும்ப அட்டை ரத்தாகிவிடும் .





வெள்ளி, 27 அக்டோபர், 2017

வனத்துறை ஊழியரை அடித்து உதைத்த கிராம மக்கள்..! October 27, 2017

வனத்துறை ஊழியரை அடித்து உதைத்த கிராம மக்கள்..!


திருவண்ணாமலை அருகே வனத்துறை ஊழியரை பொதுமக்கள்  சராமரியாக அடித்து உதைத்த சம்பவம், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி திருமலை என்பவர்,  மாட்டுவண்டியில் மணல் எடுத்து விற்று வந்துள்ளார். இந்நிலையில், காட்டுப்பகுதியில் அவரை வனத்துறையினர் தாக்கியதாகவும், இதில் அவர், உயிரிழந்ததாகவும்  உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த வனவர் தாண்டவராயன், சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அவரை சிறைபிடித்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அவரை சராமரியாக தாக்கியுள்ளனர். 

மேலும் அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தினர். இதனிடையே, படுகாயமுற்ற வனவர் தாண்டவராயனை போலீசார் மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொழிலாளியின் உயிரிழப்பிற்கு காரணமான வனவர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டதால், போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், மேல்புழுதியூர் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

எண்ணூர் அனல் மின் நிலையத்தால் வெள்ள அபாயத்தில் வடசென்னை! October 27, 2017

எண்ணூர் அனல் மின் நிலையத்தால் வெள்ள அபாயத்தில் வடசென்னை!


வடகிழக்கு பருவமழை ஓரிருநாளில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால், எண்ணூர் பகுதியில் செயல்படும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலாலும்,  நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், வடசென்னை பகுதிக்கு வெள்ள அபாயம் உருவாகியுள்ளது.

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில், அடையாறு பாயும் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக ஆற்றுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், பருவமழை தீவிரமாகப் பெய்தால், இந்த ஆண்டு எண்ணூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எண்ணூர் பகுதியில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாம்பல் கொட்டப்படுவதால், மழைநீர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், கனமழை பெய்யும் போது வடசென்னை பகுதிகளான அத்திப்பட்டு, தாழங்குப்பம் போன்றவை வெள்ளக் காடாக மாறும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். 

ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொட்டப்பட்டிருக்கும் சாம்பல் கழிவுகளை அகற்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், தற்போது வரை அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய புகாராக இருக்கிறது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தையும், தூர்வாராமல் இருப்பதால், வடசென்னை பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேறி கடலில் கலக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. 

ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்தால் மட்டுமே வடசென்னை மக்கள் தங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

​தேவர் சிலை தங்கக் கவசம்: வங்கி அதிகாரிகளுடன் மதுரை ஆட்சியர் பேச்சுவார்த்தை..! October 27, 2017

​தேவர் சிலை தங்கக் கவசம்: வங்கி அதிகாரிகளுடன் மதுரை ஆட்சியர் பேச்சுவார்த்தை..!


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பேங்க் ஆஃப் இந்தியா மதுரை வங்கிக் கிளை பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கக் கவசத்தை, வெளியே எடுக்கும் அதிகாரம் அதிமுக பொருளாளருக்கும், தேவர் நினைவிட பொறுப்பாளர் ஆகிய இருவருக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ. பன்னீர் செல்வமும், டிடிவி தினகரன் தரப்பில் ரங்கசாமி என்பவரும் பொருளாளராக உள்ளனர். இவர்களில் யாரை அதிமுக பொருளாளராக ஏற்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், தங்க கவசத்தை வெளியில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கவசத்தை எடுக்கும் நோக்கில், ஓ. பன்னீர் செல்வம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு சென்றுள்ளார். எனினும், டி.டி.வி தினகரன் தரப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிக் கிளை முன்பாக கூடினர். 

இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மதுரை காவல் ஆணையர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் வங்கிக் கிளை முன்பாக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 13 கிலோ எடை கொண்ட இந்த தங்க கவசம் 4 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வங்கியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு! October 27, 2017

​ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!


உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதையடுத்து அங்கு தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜெயலலிதாவின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க, தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்க தான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் இருக்கை ஏற்படுத்துவதன் மூலம், அமெரிக்காவில் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்ட ஆய்வுகள் நடைபெறும் என்றும், நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை பதிப்பித்தல் போன்ற பணிகள் மூலம், தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும் என்றும், முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பாக முதல் முதலில் டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தம் ஆகியோர் யோசனை தெரிவித்ததோடு நிதியுதவியும் அளித்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கியே அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா இதனை அதிமுக கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்ட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தபீஹா , ஹலால் வித்தியாசம் என்ன?


​டெங்கு கொசு: வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு! October 27, 2017

​டெங்கு கொசு: வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு!



திப்பூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த டாஸ்மாக் பார் உட்பட பல இடங்களுக்கு 8லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக திருப்பூர் சந்தைப்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் பாரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் சுகாதார சீர்கேடு இருந்தது.

இதையடுத்து அந்த பாருக்கு 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சிறுபூலுவபட்டி , டூம்லைட் , கொங்கு நகர் ஆகிய பகுதிகளில்  உள்ள வீடுகளில்  ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு சுகாதாரமற்ற முறையில் இருந்த வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் வணிக வளாகம், மருத்துவமனை, வீடுகள் என பல இடங்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.

வியாழன், 26 அக்டோபர், 2017

already exposed Jaggi and his Jaggu's - thanks IBC Tamil


24 மணி நேரத்தில் மழை: 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறை October 26, 2017

24 மணி நேரத்தில் மழை: 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறை


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சூழல் சாதகமாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை குன்னூரில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

மேலும், மதுரையில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. பழங்காநத்தம், பொன்மேனி பகுதிகளிலும், அண்ணா நகர், கே.கே.நகர் ஆகிய இடங்களிலும் சுமார் 2 மணி நேரம்  கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயப் பணிகளுக்கு இந்த மழை கை கொடுக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. 

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில்  ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டறை திறக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறை இன்று திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் தாங்கள் தங்கியுள்ள இடங்களின் அருகாமையில் மழை நீர் தேங்கி நின்றாலும், குப்பைகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை வழங்க பொதுமக்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்ஆப் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. 

மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கும் திட்டத்தில் மாற்றம்? October 26, 2017


மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கும் திட்டத்தில் மாற்றம்?


மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக மாற்று ஆவணங்களை பயன்படுத்த ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாதுகாப்பு காரணங்களுக்காக மொபைல் எண்ணுடன் ஆதாரை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் மொபைல் எண் சேவை முடக்கப்படும் எனவும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆதார் எண் மட்டும் தற்போது மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டு வருவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து மாற்று ஏற்பாடாக குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள அட்டைகளை மொபைல் எண்ணுடன் இணைக்க பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்துக்கு மேற்கு வங்க முதலைமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.