ஞாயிறு, 1 அக்டோபர், 2017

​கழிப்பறை இல்லாததால் விரக்தி: மாமனார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த மருமகள்.! October 01, 2017




கழிப்பறை இல்லாததால் மனதளவில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது மாமனார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் உள்ள முசாஃபர்பூர் மாவட்டத்தை சேர்ந்த மிகவும் பிந்தங்கிய சேகர் நியூரா கிராமத்தில் இந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

கழிவறை கட்டித்தர தொடர்ந்து வலியுறுத்தியும், அதனை தவிர்த்து வந்த தனது மாமனார் மற்றும் கணவனின் தம்பி மீதும் ஜோதி என்ற 25 வயது பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்பெண்ணின் கணவர் தமிழ்நாட்டில் வேலை செய்து வருகிறார். தனது கணவர் வீட்டில் கழிவறை இல்லாத நிலையில், மிகுந்த சிரமத்திற்கு உள்ளான ஜோதி தனது கணவர் தமிழகத்திலிருந்து சொந்த ஊருக்கு வரும் போது மட்டுமே மாமனார் வீட்டுக்கு வந்து தங்குகிறார்.

கழிவறை கட்டித்தர தனது மாமனாரிடம் தொடர்ந்து வலியுறுத்திவந்தபோதும், அதனை கண்டுகொள்ளாததால் அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஜோதி.

இது தொடர்பாக மாமனார் மற்றும் கணவனின் தம்பி காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த போது, விரைவில் வீட்டில் கழிப்பறை கட்டித்தருகிறோம் என எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்ததன் அடிப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஒரு வாரத்திற்குள் கழிப்பறை கட்டித்தர வேண்டும் என ஜோதி வலியுறுத்திய நிலையில், பணம் ஏற்பாடு செய்ய கூடுதல் அவகாசம் கேட்டனர், பின்னர் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தனது புகாரை ஜோதி திரும்பப்பெற்றுக்கொண்டார்.