திங்கள், 2 அக்டோபர், 2017

மழை எதிரொலி : கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..பொதுமக்கள் வெளியேற்றம்..! October 02, 2017




மழை காரணமாக கூவம் ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளதால் தீவுத்திடல் எதிரே உள்ள காந்திநகர் கூவம் கரையோர குடிசைவாசிகள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நேற்று ஒரே நாளில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது. பரவலான மழையின் காரணமாக கூவம் ஆற்றின் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவுத்திடல் எதிரே உள்ள காந்திநகர் கூவம் கரையோர குடிசைவாசிகள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில்வே நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கூவம் ஆற்றின் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மனதில் கொண்டு அரசு அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.