அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு ஜெயலலிதா அளித்த கடிதத்தில் அவரது கைரேகையை பதிவு செய்த மருத்துவர் பாலாஜி வரும் 27-ந் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், வேட்பாளர் படிவத்தில், ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டதைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் வில்ஃப்ரெட், உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கட்சியின் அவை தலைவர் மதுசூதனன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் கைரேகை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மதுசூதனன் அளித்த கடிதத்துடன் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை இணைக்கப்படவில்லை என்றும் வில்ஃப்ரெட் சாட்சியம் அளித்தார்.
கடிதத்தை அனுப்ப மதுசூதனனுக்கு ஜெயலலிதா அதிகாரம் அளித்தாரா என்பது தெரியுமா ? என்ற நீதிபதியின் கேள்விக்கு இல்லை என்றும் தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் கூறினார். இதனையடுத்து இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த மருத்துவர் பாலாஜி வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.