தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அம்சம் ஏதும் பட்ஜெட்டில் இல்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரி செலுத்துபவர்களுக்கு எவ்வித வரிச் சலுகையும் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ளார். ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் மிகப்பெரிய தந்திரம் என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாய் என ஒதுக்கினால்கூட 5 லட்சம் கோடி செலவாகும் என்று, இன்சுரன்ஸ் கம்பெனிகள் வருடத்திற்கு 15 ஆயிரம் வழங்கினால் கூட 10 கோடி குடும்பங்களுக்கு 1.5 லட்சம் கோடி செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்றும், இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தோல்வி அடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள ப. சிதம்பரம், இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.