மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி ஏற்ற இறக்கங்கள் அடிப்படையில் விலை உயரும் பொருட்கள் மற்றும் குறையும் பொருட்களின் பட்டியலைத் தற்போது காண்போம்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார், மோட்டார் சைக்கிள், செல்போன்கள், வெள்ளி, தங்கம், காய்கறிகள், பழரசங்கள், மூக்கு கண்ணாடி, சோயா புரோட்டீன் தவிர்த்த பிற சமையலுக்கு பயன்படும் பொருட்கள், வாசனை திரவியம், கழிவறை பொருட்கள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும்.
மேலும் பற்பசை, பல்மருத்துவத்தில் பயன்படும் பேஸ்ட், பவுடர்கள், முகச்சவரம் செய்ய பயன்படும் பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை உயரும். டியோடரன்ட்டுகள், பட்டுத் துணி, காலணிகள், ஸ்மார்ட் வாட்ச், எல்சிடி, எல்இடி, டிவி பேனல்கள், நாற்காலி, மேசைகளின் விலை அதிகரிக்கும்.மெத்தைகள், விளக்கு, கைக்கடிகாரம், கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் விலை உயரும்.
குழந்தைகள் விளையாடும் சிறு பொம்மைகள், வீடியோ கேம் பொருட்கள், உள்ளரங்கு, மைதான விளையாட்டுகளில் பயன்படுத்தும் உபகரணங்கள், சிகரெட், லைட்டர்கள், மெழுகுவர்த்தி, சமையல் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் விலையும் உயரும்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு, சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கச்சா முந்திரி, சோலார் பேனல் அமைக்க பயன்படும் ஒருவகை கண்ணாடி, காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான பொருட்கள், மின்னணு சாதனங்களுக்கு பயன்படும் சிறிய திருகு உள்ளிட்ட பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்போது அவற்றின் விலை குறையும்.