
லஞ்சப் புகாரில் சிக்கி கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, 13 மணி நேர விசாரணைக்குப்பின், நள்ளிரவு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரின் பணியை நிரந்தரம் செய்ய, பல்கலைகழக துணைவேந்தர் கணபதி, 30 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சுரேஷ் புகார் அளித்தார். இதையடுத்து கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். சுரேஷிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை ரொக்கமாகவும், மீதமுள்ள 29 லட்சம் ரூபாயை காசோலையாக கணபதி பெற்றதற்கான ஆதாரம் இந்த சோதனையின் போது கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவை குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், பின்னர் கணபதியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றும் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 13 மணி நேர விசாரணைக்குப்பின், துணை வேந்தர் கணபதியை, பந்தய சாலையில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் ஜான் மினோ இல்லத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில், வரும் 16ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் கணபதி அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட துணை வேந்தர் கணபதி செய்தியாளர்களிடம், தன் மீது புகார், திட்டமிட்ட சதி என்று தெரிவித்தார்.