சனி, 24 மார்ச், 2018

பழக்கம் என்றால் என்ன? அது எவ்வாறு சமூகத்தை பாதிக்கிறது?


Imageசண்முக பிரியா சென்னையில் உள்ள WOW - Mind & Behavioural Clinic மனநல மையத்தின் உளவியலாளர் டில்லிபாபுவுடன் நடத்திய நேர்காணல்...

1. பழக்க வழக்கங்கள் என்றால் என்ன? பழக்க வழக்கங்களில் வகைகள் ஏதேனும் உள்ளதா?


தினமும் தொடர்ந்து செய்யப்படும் விஷயங்கள் பழக்க வழக்கங்கள் என்று கூறப்படுகிறது. இது கவன ஈர்ப்புக்காகவோ அல்லது தனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவோ இருக்கலாம். நம் மனதிற்குள் உள்ள ஒரு தூண்டுதல், தினமும் நடக்கும் பட்சத்தில், காலப்போக்கில் அது பழக்கமாகி விடுகிறது. இதில் இருந்து சிலர் நன்மையை அடைகின்றனர். 

எடுத்துக்காட்டாக, குறித்த நேரத்தில் அனைத்தையும் செய்வதன் மூலம் ஒருவர் நம்மை பாராட்டுகிறார் என்றால், அந்த பாராட்டை பெறுவதற்காகவே, குறித்தநேரத்தில் அனைத்தையும் செய்யத் தொடங்கிவிடுவோம். இது ஒரு பழக்கமாகவே மாறிவிடும்.

பழக்க வழக்கங்களுக்கு என்று தனியாக வகைகள் இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான பழக்கங்கள் இருக்கும். அதாவது, ஒருவருக்கு முகத்தை அடிக்கடி துடைக்கும் பழக்கம் இருக்கும். மற்றவருக்கு கண்ணாடி சரி செய்யும் பழக்கம் என்று பலருக்கு பலவிதமான பழக்கங்கள் இருக்கும்.


2. உளவியல் ரீதியாக பழக்க வழக்கங்கள் எவ்வாறு ஒருவரை பாதிக்கிறது?

முன்பே சொன்னது போல், ஒருவரிடம் இருந்து பாராட்டை பெறும்பொழுது, அதை மறுபடியும் செய்யவேண்டும் என்ற உந்துதல், மனதளவில் ஏற்படுகிறது. 21 நாட்கள் தொடர்ந்து ஏதாவது ஒன்றை செய்யாமல் இருந்தால், அதனை நாம் அடுத்து செய்ய மாட்டோம். அதற்கு நம் மனம் ஒத்துழைக்காது. இது உளவியல் ரீதியாக மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

3. பழக்கவழக்கங்கள், ஒருவரின் குணத்தை தீர்மானிக்குமா?

கண்டிப்பாக. ஒருவரிடம் நல்ல பழக்க வழக்கங்கள் இருக்குமானால், அவர் நல்லவராக மதிக்கப்படுவார். ஒருவரிடம் தீய பழக்க வழக்கங்கள் இருக்கிறது என்றால், அவர் கெட்டவராக பார்க்கப்படுவார்.  உதாரணத்திற்கு, உதவி செய்தல் என்பது நல்ல பழக்கம். அதனை தொடர்ந்து செய்யும்பொழுது, அது அவர்களது குணமாகவே மாறுகிறது. அதனால், நல்ல பழக்கவழக்கம் மற்றவரிடத்தில் நமக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தும்.


4. மனிதர்களை போலவே, மிருகங்களுக்கும் பழக்க வழக்கங்கள் இருக்கிறதா?

எந்த ஒரு விஷயத்தை நாம் தொடர்ந்து செய்கிறோமோ, அது ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது. இது மனிதர்கள் மட்டுமல்லாமல், மிருகங்களுக்கும் பொருந்தும். நாம் தினமும் பார்க்கும் உயிரினங்களின் பழக்க வழக்கங்களைப் பற்றி கூறவேண்டுமானால், வரிசையாக செல்வது, எறும்பின் பழக்கம். தன் வாலை பிடிக்க முயற்சி செய்வது, நாயின் பழக்கம். இதுபோலவே, பூனை ஒரே இடத்தில் அமைதியாக இருக்கும். இது அதனுடைய பழக்கம். 

இதுமட்டுமல்லாமல், சில மிருகங்கள், தான் இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்று முயற்சி செய்யும். இது, அதனுடைய பழக்கம். இதன்மூலம், மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பழக்கங்கள் இருக்கிறது என்பது புலப்படுகிறது.

5. தற்பொழுது, திரைப்படங்களை வெளியிடாமல், திரைத்துறையினர் போராட்டம் நடத்துகின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரைப்படம் வெளியிட்டாலும், அதனை மக்கள் பார்ப்பார்களா? ஒருவரின் பழக்க வழக்க மாற்றம் எந்தவகையான பாதிப்பை இதற்கு உருவாக்குகிறது?

ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்யும்பொழுது, அது நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, அது பழக்கமாக மாறிவிடுகிறது. தற்பொழுது, ஒரு நீண்ட இடைவேளை உருவாகும்பொழுது, அந்த பழக்கம் மாறிவிடுகிறது. நரம்பு மண்டலத்தில் இருந்து, நாம் தொடர்ந்து செய்யும் ஒரு விஷயத்தை செய்வதற்கான தூண்டுதல் வந்தபொழுதிலும், அதை நீண்டகாலம் செய்யமுடியாமல் போவதன்மூலம், அந்த பழக்கம் மாற்றம் அடைகிறது.

அதாவது, வெள்ளிக்கிழமை தோறும், படம் வெளிவரும், நாம் படம் பார்க்கலாம் என்ற எண்ணம் நம்மிடையே தோன்றும். இது நரம்பு மண்டலத்தின் தூண்டுதலால் ஏற்படுவது. 
சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்தால், மனம் அமைதி பெறும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கும். மேலும் சிலருக்கு, படம் பார்ப்பது மற்றும் நோக்கமில்லாமல், குடும்பத்தினருடனோ நண்பர்களுடனோ நேரத்தை செலவிடுவது என்ற நோக்கமும் இருக்கும். இதனாலும் படத்திற்கு செல்வார்கள். 

இப்பொழுது, படம் வெளிவரவில்லையெனில், அவர்களுக்கு தேவையான மன அமைதி மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுதல் போன்ற உண்மையான நோக்கத்தை வேறு விதத்தில் செய்ய முன்வருவர். திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல், இது ஒரு கலையாகவும், இலக்கியமாகவும் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை பார்த்தலின் மூலம் பத்து புத்தகங்கள் வாசித்ததற்கு சமமான அறிவை பெற முடிகிறது. 

இந்த சமயத்தில், திரைப்படங்களை வெளியிடாமல் இருப்பதன் மூலம், நம் பழக்கவழக்கத்தில் நீண்ட இடைவேளை ஏற்படுகிறது. 21 நாள் முதல் 41 நாள் இடைவேளை என்பது, நம் பழக்கவழக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இதனால், படம் பார்ப்பதை தவிர, வேறு சில பொழுதுபோக்கு விஷயத்தை நம் மனம் ஏற்க பழகிவிடும். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு படங்களை வெளியிட்டாலும், அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கு சில காலம் தேவைப்படும். 

6. இதன்மூலம் திரைத்துறைக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று கூறுகிறீர்களா?

ஏற்கனவே, தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகமாகி இருப்பதனால் திரைப்படத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதுபோல, பழக்கவழக்க மாற்றமும் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டால், திரைப்படத்தொழில் முடங்கிப் போகும். இத்தொழில் முடங்குவதால், பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவர். 

திரைத்துறை என்பது மிகப்பெரிய துறையாக இருக்கிறது. இதில் வேலைவாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. தற்பொழுது, திரைப்படங்கள் வெளியிடவில்லை என்றாலோ திரைப்படங்கள் தயாரிக்கவில்லை என்றாலோ, பெரும்பாலானோர் வேலைவாய்ப்பினை இழந்துவிடுவர். அதிகப்படியான வேலையின்மை தான் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது, இதுபோன்ற மிகப்பெரிய துறை முடக்கப்படுவது என்பது மேலோட்டமாக பார்க்க வேண்டியதாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாக பார்க்கவேண்டியுள்ளது. 

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோர் அதிகமாக சம்பாதித்து வைத்துள்ள மேல்தட்டு மக்கள். அவர்களால் இந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், திரைத்துறையில் தினக்கூலியாக வேலைபார்க்கும் லைட் மேன், ஒப்பனை செய்பவர்கள், ஓட்டுனர்கள், திரையரங்குகளில் கடைகள் வைத்திருப்பவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

ஒரு துறையை சார்ந்த போராட்டம், அத்துறையில் இருக்கும் அனைவருக்கும் பலனை தரவேண்டும். ஆனால், இவர்களது போராட்டம், அத்துறையைச் சேர்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் போராட்டமாக இருக்கிறது.


7. இதுபோன்று ஒருவரின் பழக்கவழக்கத்தை நீண்ட இடைவேளை மூலம் மாற்ற முடியும் என்றால், குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் போன்றவற்றை நாம் மாற்றமுடியுமா?


இதற்காகத்தான் போதைத்தடுப்பு மையங்கள் இருக்கின்றன. அங்கு, அவர்களுக்கு முதலில் போதைத்தடுப்பு ஊசி போடப்படும். இதனால், மன ரீதியாக மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் சில மாற்றங்கள் ஏற்படும். மது அருந்துவதை விட்டுவிட்டாலும், 21 நாட்களுக்கு நம் ரத்தத்தில் மது கலந்திருக்கும். இதனால் தான், 21 நாட்கள் நச்சுத்தன்மையை அகற்றும் செய்முறை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், நம் உடல் அதற்கு தகுந்தாற்போல மாறிவிடுகிறது. 

போதைத்தடுப்பு மையங்களில் இருப்பதன் மூலம், மது அருந்துவதற்கான வழிகள் இருப்பதில்லை. இதனால், தானாகவே, நம் உடல் அதற்கு தகுந்தாற்போல் மாறிவிடும். அப்படியும் கூட சிலருக்கு மனதளவில் மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். இதை போக்கவே, அவர்களுக்கு மனோத்தத்துவ நிபுணர்கள் மன ரீதியான சிகிச்சை, மாற்று முறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

இதன்மூலம், அவர்களுக்கு போதைப்பொருட்களுக்கு மீண்டும் அடிமை ஆவது தடுக்கப்படுகிறது. சிலர் மட்டுமே, தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கின்றனர். அவ்வாறு மனதை கட்டுப்படுத்துபவர்களுக்கு உளவியல் மருத்துவர்களின் ஆலோசனை பெரிதளவில் தேவைப்படாது. ஆனால், பெரும்பாலானோரால், சுயமாக கட்டுப்படுத்த முடிவதில்லை. அவர்களுக்கு உளவியல் மருத்துவர்களின் ஆலோசனை அதிக அளவில் தேவைப்படுகிறது. அப்படி ஆலோசனை கொடுக்கவில்லையானால், அவர்கள் மற்றவர்களிடம் எரிச்சலைக் காண்பிப்பது, கோபமடைவது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிடுவர்.