செவ்வாய், 20 மார்ச், 2018

​ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராக திமுக சட்டப்பேரவையில் கண்டனம்! March 20, 2018

Image

ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சட்டமன்றத்தில இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மதசார்பற்ற தன்மைக்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ரத யாத்திரையை தமிழக அரசு அனுமதித்துள்ளதாக தெரிவித்தார். ரதயாத்திரையால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதை சுட்டி காட்டினார். தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என்ற கேள்வி எழுவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரதயாத்திரையை அனுமதித்தற்கு கண்டனம் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரத யாத்திரையால் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையால் பாதுகாப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார். இந்த ரத யாத்திரையால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், சில அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விவகாரத்தை கொண்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ரத யாத்திரை 5 மாநிலங்களில் தடையின்றி சென்றதாக குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, ஜனநாயக நாட்டில் அனைத்து மதத்திற்கும் சம உரிமை உண்டு என குறிப்பிட்டார். 

இதனை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு தமிழக அரசு துணை போவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.