நியமன எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத புதுச்சேரி சட்டப் பேரவை சபாநாயகர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை, நியமன உறுப்பினர்களாக, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார்.
இதை புதுவை அரசு ஏற்காத நிலையில், அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அவர்கள் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க வந்த போது சட்டப் பேரவைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மதிக்காத புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், செயலாளர் வின்சென்ட் ராயருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சாமிநாதன் எம்.எல்.ஏ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு வரும் திங்களன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.