சனி, 31 மார்ச், 2018

பொள்ளாச்சியில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துவரும் ஹெலிகாப்டர் சுற்றுலா! March 30, 2018

பொள்ளாச்சியின் இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளை, சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டரில் பறந்துசென்று, பார்த்து ரசித்து வருகின்றனர். 

தமிழகத்தின் தென்னை நகரம் என்று வர்ணிக்கப்படும் பொள்ளாச்சி அருகே, வால்பாறை, டாப்சிலிப், ஆழியார் அணை உள்ளிட்ட இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் உள்ளன. 

இவற்றை கண்டு ரசிப்பதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். 

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ஹெலிகாப்டரில் சென்று இயற்கை காட்சிகளை கண்டுரசிக்கும் வசதியை, தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி, பொள்ளாச்சி அருகே உள்ள நாமூசுங்கம் தனியார் கல்லூரியில் இருந்து, சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று இயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். 

சுமார் 10 நிமிடங்கள், 15 கிலோ மீட்டர் தொலைவு வரை ஹெலிகாப்டரில் பறந்து செல்ல, ஒரு நபருக்கு 4,199 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 

ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில், 6 பேர் பயணிக்க முடியும். இந்தப் புதிய வசதி காரணமாக, பொள்ளாச்சியில் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. 

ஹெலிகாப்டரில் பறந்தபடி, இயற்கைக் காட்சிகளை கண்டு களிக்கும் வசதி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.