அடிமையாக உள்ளவர்கள் தான், தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என, அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனின் கருத்தை, திராவிடர் கழகத்தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.
தஞ்சை அருளானந்தர் நகரில் உள்ள மறைந்த நடராஜன் இல்லத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்றனர். பின்னர் சசிகலாவை சந்தித்த அவர்கள் ஆறுதல் கூறினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீரமணி, கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு பிச்சை கேட்பது போல், தற்கொலை செய்து கொள்வதாக கூறுவது விரும்பத்தக்கது அல்ல என கூறினார்.
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், தற்போது இதுபோன்ற வீரம் தான் அவசியம் என்றும் வீரமணி தெரிவித்தார். மாறாக அடிமையாக உள்ளவர்கள்தான் தற்கொலை செய்து கொள்ளும் நிலமைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.