புதன், 21 மார்ச், 2018

​பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்! March 21, 2018

Image


தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின் திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் பெரியார் சிலைகளை சேதப்படுத்தியவர்களையும், அவர்களை தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதும், அதற்காக நடைபெற்ற போராட்டங்களும் அனைவரும் அறிந்ததே என ஸ்டாலின் குறிப்பிட்டார். எச்.ராஜா அவ்வாறு பேசிய போதே அவர் கைது செய்யப்பட்டிருந்தால், இது போன்ற செயல்கள் நடந்திருக்காது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கமளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதும், உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு, அதற்கு காரணமான செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டதாக கூறினார். திருப்பத்தூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டத்திற்குரியது எனவும், இது போன்ற செயல்களில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.