சனி, 31 மார்ச், 2018

பிரதமர் மோடியை கிண்டலாக விமர்சித்த ராகுல் காந்தி March 30, 2018

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, பிரதமர் மோடி எழுதிய Exam Warriors புத்தகம் ஆறுதல் தரும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக விமர்சித்துள்ளார். 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள்கள் வெளியான நிலையில், அந்த பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, Exam Warriors புத்தகத்தில் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ள பிரதமர் மோடி, அதன் இரண்டாவது பாகத்தில், கேள்வித்தாள் வெளியானதால் எதிர்காலத்தை இழந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மனஅழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்து விளக்கமாக புத்தகம் எழுதுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியானதை கண்டித்து டெல்லி, லூதியானா உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய கல்வி தேர்வு வாரியத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

கேள்வித்தாள் விவகாரத்தில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியானது. இதையடுத்து, டெல்லியில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் வீட்டுக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.