செவ்வாய், 20 மார்ச், 2018

நோக்கியா மொபைல் ஃபோன் வெடித்து 18வயது பெண் பலி March 19, 2018

Image


ஒடிசா மாநிலம் ஜஹர்சுகுடா மாவட்டத்தில் 18 வயது பெண், மொபைல் ஃபோன் வெடித்து பலியான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் ஜஹர்சுகுடா மாவட்டம் கீரியாகனி கிராமத்தை சேர்ந்த உமா ஒரம் என்னும் பெண் (வயது 18) தனது உறவினருடன் மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அதிக சத்தத்துடன் அந்த ஃபோன் வெடித்துச் சிதறியது.

இதில் மார்பு, கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயமடைந்த உமா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சுயநினைவின்றி கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், உமா உயிரிழந்துவிட்டதாக கூறினார். இது அக்கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக உமாவின் சதோதரர், துர்கா பிரசாத் ஓரம் தெரிவிக்கையில், உமா மதிய உணவிற்கு பிறகு தனது உறவினர் ஒருவரிடம் ஃபோனில் பேசவிருந்த நிலையில், சார்ஜ் இல்லாததால் ஃபோனை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசத் தொடங்கியதாக தெரிவித்தார். அப்போது ஃபோனில் இருந்த பேட்டரி வெடித்ததில் சுயநினைவிழந்து கீழே விழுந்ததாக கூறினார்.

மேலும் வெடித்தது நோக்கியா 3110 மாடல் மொபைல் என்றும் தகவல் தெரிவித்தார். நடந்தது என்னவென்று தெரிவதற்குள் உமா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கூறியது பெரும் அதிர்ச்சியாக உள்ளது என துக்கத்துடன் கூறினார் துர்கா பிரசாத்.

இதனை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் சென்ற வருடம் வெளியான நோக்கியா 3110 ஃபோனால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு அந்நிறுவனத்திடம் நஷ்டயீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே சம்வத்தை நேரில் சென்று பார்த்த காவல்துறை அதிகாரிகள் குடும்பத்தினரிடம் தகவல் பெற்று உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.