ஞாயிறு, 18 மார்ச், 2018

தமிழர்கள் மீது மாற்று மொழியை திணிக்க பாஜக முயல்வதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு! March 18, 2018

Image

அழகான தமிழ் மொழியை ஒழித்துவிட்டு தமிழர்கள் மீது மாற்று மொழியை திணிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூக மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. தற்போதைய அரசியல் சூழல்களுக்கு ஏற்ப காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய அரசியல் வியூகங்கள் மற்றும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அடுத்து வர உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கட்சியின் மூத்த தலைவரான சோனியாகாந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தின் நிறைவு நாளான இன்று கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது குருஷேத்திர போரில் ஆட்சி அதிகாரத்திற்காக கவுரவர்கள் செயல்பட்டதை போல் பாஜக, ஆர்எஸ்எஸ் செயல்படுவதாகவும் உண்மையை நிலைநாட்ட பாண்டவர்கள் செயல்பட்டது போல் காங்கிரஸ் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே பெரிய சுவர் எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய ராகுல்காந்தி, அந்த சுவரை தகர்ப்பதுதான் தமது முதல் பணி என்றார். பாஜகவைவிட காங்கிரசிடமிருந்து மக்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது கடைசி சில வருடங்களில்  மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காங்கிரஸ் அரசு செயல்படாததனாலேயே நாடாளுமன்ற தேர்தலில் தோற்க நேர்ந்ததாகக் கூறினார். 
கொலை வழக்கில் சிக்கியவர்கள் கூட பாஜகவிற்கு தலைவராவதை மக்கள் ஏற்பார்கள் ஆனால் அது போன்றவர்கள் காங்கிரசுக்கு தலைவராவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார். அந்த அளவிற்கு காங்கிரசை உயர்ந்த இடத்தில் வைத்து மக்கள் பார்ப்பதாக ராகுல்காந்தி கூறினார். 


பிரதமர் மோடி விரித்த மாய வலையில் மக்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ராகுல்காந்தி, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் மோடி தெரிவித்த வாக்குறுதி என்னவாயிற்று எனக் கேள்வி எழுப்பினார்.

வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாக ராகுல் குற்றம்சாட்டினார். உணவு, உடை என மக்கள் மீது எல்லாவிதத்திலும் கட்டுப்பாடுகளை மோடி அரசு திணிப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, அழகான தமிழ் மொழியை ஒழித்துவிட்டு மாற்று மொழியை தமிழர்கள் மீது திணிக்க மோடி அரசு முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.