கேள்வித்தாள் வெளியான புகாரை தொடர்ந்து, 10ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான தேர்வு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பொருளாதார பாடத்துக்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதாக புகார் எழுந்தது.
சி.பி.எஸ்.இ இப்புகாரை மறுத்து வந்த நிலையில்,12ம் வகுப்பு பொருளாதாரத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதே போல்,10ம் வகுப்பு கணிதப் பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்றும், ரத்து செய்யப்பட்ட பாடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
இதனிடையே, வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்டறிந்த பிரதமர், கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.