சனி, 24 மார்ச், 2018

​நாடாளுமன்றம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு! March 24, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை டெல்லி நாடாளுமன்றம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். 

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் முன் மார்ச் மாதம் 2ம் தேதி 6 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் ஈடுபட உள்ளனர். இதனையொட்டி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து விவசாயிகள் பலர் டெல்லி புறப்பட்டனர். 

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு ரயில் நிலையம் சென்றனர். அவர்களுக்கு மன்னார்குடியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து, டெல்லி நாடாளுமன்றம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.