புதன், 28 மார்ச், 2018

நீச்சலில் சாதனை படைக்க தமிழகத்தை தேர்ந்தெடுக்கும் வீரர்கள்..! March 28, 2018

Image

நீச்சல் சாதனை மூலம் உலகம் முழுவதும் பேசப் பட வேண்டும் என்ற கனவு கொண்டவர்களின் முதல் தேர்வாக உள்ளது தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான பாக் ஜலசந்தி. நீச்சல் வீரர்கள் இந்த பாக் ஜலசந்தியை தங்கள் சாதனைக் களமாக தேர்வு செய்வது ஏன். அதில் நீந்துவதில் உள்ள சவால்கள் என்ன என்ன?

கடலில் நீந்தி நீச்சலில் சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் இருப்பவர்கள் தங்கள் சாதனைகளை நிறைவேற்ற உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் உள்ள ஏழு கால்வாய்களில் ஒன்றிணைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்தியா இலங்கை இடையே உள்ள பாக்ஜலசந்தி கடற்பகுதி, ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்டல் மற்றும் சுருக்குலீக், தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜலசந்தி, இங்கிலாந்தில் உள்ள இங்லீஸ் கால்வாய், அமெரிக்காவில் உள்ள காட்டிலினா தீவு மற்றும் மும்பையில் இருக்கும் அலிபாய் கடற்பகுதி என ஏழு கடற் பகுதிகள் நீச்சல் வீரர்களின் கனவுகள் மையம் கொள்ளும் இடமாக உள்ளன. இதில் அதிக தூரம் கொண்ட கடல் கால்வாய்பகுதி தனுஷ்கோடி, தலைமன்னார் இடையேயான 33 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாக்ஜலசந்தியாகும். இந்த கடல் பகுதிதான் நீச்சல் வீரர்களுக்கு அதிக சவாலை கொடுக்கும் கடல் கால்வாய் பகுதி. மற்ற நாடுகளில் இருக்கும் கடல் கால்வாய்கள்  ஒரே கடலை கொண்டுள்ள கடற்பகுதி ஆகும். ஆனால் பாக் ஜலசந்தி இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலை சுற்றிலும் கொண்டுள்ளது. அதனால் தான் நீச்சல் வீரர்களுக்கு பாக் ஜலசந்தி அதிக சவாலை கொடுக்கிறது. 

நீச்சல் வீரர்கள் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான கடல் பகுதியினை கடப்பதற்கு மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களை மட்டுமே தான் தேர்வு செய்கின்றர்கள். காரணம் இந்த மாதத்தில் மட்டும் தான் காற்றின் வேகம், கடலின் நீரோட்டம் மற்றும் கடல் சீற்றம் குறைவாகக் காணப்படும். பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நீச்சல் வீரர்கள் நடுக்கடலில் நீந்தி வரும்போது சந்திக்கும் சவால்களில் முக்கியமானது கடல் நீரோட்டம் மற்றும் ஜெல்லி மீன்கள். பாக் ஜலசந்தி கடலில் ஜெல்லி மீன்களும் மற்ற கடற்பகுதியில் ஷார்க் உள்ளிட்ட மீன்களும் நீச்சல் வீரர்களுக்கு இணையாக அவர்களுக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு அச்சுறுத்தும். ஜெல்லி  மற்றும் ஷார்க் மீன்களில் அதிக நீளம் மற்றும் அதிக எடை கொண்ட விஷதன்மை கொண்ட மீன்கள் கடித்தாலும், அடித்தாலும் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க கூடிய அபாயமும் உள்ளது. பாக் ஜலசந்தியை கடக்கும் வீரர்கள்  அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டபின்  இந்திய - இலங்கை என இரு நாட்டிலும்  உள்ள கடற்படை, வெளியுறவுத்துறை, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முழுமையான அனுமதி பெற்று தங்கள் சாதனையை படைக்க கடலில் இறங்குகின்றனர்.

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான கடல் பகுதியில் இதுவரை 14 முறை நீந்தி கடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே பாக் ஜலசந்தியை நீந்தி கடப்பதில் அடுத்தடுத்து 3 சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. கடந்த 24ம் தேதி  இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு 11 மணி 58 நிமிடங்களில் நீந்தி வந்து சென்னை மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு சாதனை படைத்த நிலையில் மறு நாளே அந்த சாதனையை முறியடித்தார் ஆந்திர காவலரான துளசி சைதன்யா, தலைமன்னார் தனுஷ்கோடி இடையேயான தூரத்தை 8 மணி நேரம் 25 நிமிடத்தில் அவர் கடந்தார். 

இந்நிலையில், தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் 10 நீச்சல் வீரர்கள் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு தலைமன்னாரிலிருந்து நீந்தியபடி வந்து பகல் 1.50 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்து சாதனை படைத்தனர். அவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பாக் ஜல சந்தியை கடக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டவர் கேரளாவைச் சேர்ந்த முரளிதரன். 1960ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டும் வரை பாக் ஜலசந்தியை நீந்தி கடப்பதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும் 12 வயதிலேயே தலைமன்னார் தனுஷ்கோடியை நீந்திக் கடந்த குற்றாலீஸ்வரனின் சாதனை இன்றளவும் உலகை வியக்க வைத்து வருகிறது. ஈரோட்டைச் சேர்ந்த குற்றாலீஸ்வரன் கடந்த 1994ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி உலகின் கவனத்தை பெருமளவு ஈர்த்தார். அதோடு நின்றுவிடாமல் உலகில் கடற்பகுதியில் உள்ள 7 முக்கிய கால்வாயிகளில் 6 கால்வாய்களை நீந்தி கடந்தவர் என்கிற பெருமையையும் குற்றாலீஸ்வரன் பெற்றார். சவால்கள் நிறைந்த பாக் ஜலசந்தியில் சாதனை படைத்து உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற கனவுடன் இன்னும் பல நீச்சல் வீரர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது