பா.ஜ.க.எதிர்ப்பு அரசியல் ஏற்கனவே தமிழக மண்ணில் ஆழமாக வேறூன்றியுள்ளது.இப்போது அது ஆந்திர மண்ணையும் அசைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசின் மாநில நலன்களுக்கு எதிரான சர்வாதிகாரப்போக்கு என்றால் அது மிகையாகாது.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது ஆந்திராவுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.பாஜக அரசு பொறுப்பேற்றபின் அதைத் தொடர்வதாக வாக்குறுதி அளித்திருந்தது.ஆனால் மோடியோ,தெலுங்கு தேசம் கட்சியை தனது கூட்டணியில் இழுத்துப் போட்டு,தனது மந்திரிசபையில் இரண்டு மந்திரி பதவியையும் அளித்து சந்திரபாபு நாயுடுவை வளைத்துப் போட்டிருந்தார்.
அதேசமயம் வாக்களித்தபடி செயல்படுத்த வேண்டிய ஆந்திராவுக்கான சிறப்புத் திட்டங்கள் பற்றி மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய பாஜக அரசு மீதான ஆந்திர மக்களின் கோபமும்,சந்திரபாபு நாயுடு மீதான அதிருப்தியும் அதிகரிக்கத் துவங்கியதைத் தொடர்ந்து,சந்திரபாபு நாயுடு சுதாரித்துக் கொண்டார்.மந்திரி பதவிக்காகவோ, கூட்டணிக்காகவோ இனியும் மாநில நலனை காவு கொடுக்கக் கூடாது என்பதை உணர்ந்தார்.
அதிரடியாக மந்திரிகள் ராஜினாமா, கூட்டணியிலிருந்து விலகல் என்ற காட்சிகள் நடந்தேறியது.முன்னதாக நாடாளுமன்றத்தில் ஆந்திர எம்.பி.க்கள் உள்ளேயும் வெளியேயும் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதையும் நம்மால் காண முடிந்தது.
கூட்டணியில் இருந்தாலும் கூட, மாநில பிரச்சனை என்று வரும்போது அது பாஜக ஆளும் மாநிலம் அல்ல என்ற பாகுபாடும்,பாரபட்சமும் மோடி அரசால் பார்க்கப்படுவதை நடுநிலையோடு சிந்தித்தால் தெரியவரும். சந்திரபாபு நாயுடு இதை தாமதமாக உணர்ந்தாலும் சரியாக உணர்ந்துள்ளார்.அதனால் தான் அவர் இப்போது மத்திய அரசை நேரடியாகவே எதிர்க்கத் துணிந்து விட்டார்.
ஆரம்பகாலம் முதலே பாஜக வை கடுமையாக எதிர்த்து வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை,மோடி அரசு தனக்கே உரிய மிரட்டல் அரசியல் பாணியைக் கையாண்டு பணிய வைத்திருந்தது. அதையும் மீறி ஜெகன் மோகன் ரெட்டி 9 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக அறிவித்தார்.அதை ஆதரிப்பதாக சந்திரபாபு நாயுடுவும் அறிவித்தார்.
பாஜக வை எதிர்ப்பதன் மூலம் தான் ஆந்திர மண்ணில் அரசியல் செய்யமுடியும் என்பதை, எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் நிற்கும் தெலுங்குதேசமும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸும் நன்றாகவே உணர்ந்துள்ளன. பஜக அரசை எதிர்ப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், தெலுங்குதேசமே நேரடியாக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான அனுமதியை மக்களவை சபாநாயகரிடம் கோரியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் இந்த அரசியல் நகர்வுகள் பாஜகவின் தென் மாநில செல்வாக்கின் சரிவாகவே பார்க்கப்படுகிறது.
தெலுங்குதேசமோ, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸோ கொண்டுவரப் போகும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும்,ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியைத் தர அம்மாநிலம் தயாராகிவிட்டது. காரணம் பாஜக மீதான அம்மாநில மக்களின் எதிர்ப்பலை தான்.
தெலுங்குதேசமோ, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸோ கொண்டுவரப் போகும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும்,ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியைத் தர அம்மாநிலம் தயாராகிவிட்டது. காரணம் பாஜக மீதான அம்மாநில மக்களின் எதிர்ப்பலை தான்.
தமிழகத்தைப் பொறுத்தவரை,ஏற்கனவே நீட்,ஜி.எஸ்.டி.,உதய் மின் திட்டம்,உணவு பாதுகாப்பு திட்டம்,விவசாயிகள் பிரச்சனை, ஹைட்ரோகார்பன்,மீத்தேன்,கெய்ல்,ஓ.என்.ஜி.சி,போன்ற மாநில நலனுக்கு எதிரான பிரச்சனைகள் பாஜகவுக்கு எதிராக புயலைக் கிளப்பிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அம்பேத்கர்,பெரியார் சிலை மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு விவகாரம் சுனாமியாக உருவெடுத்து மத்திய பாஜக அரசை எதிர்ப்பின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
பஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த புதிதில் தமிழக மக்களில் சிலரிடம் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கடந்த 4 ஆண்டுகளில் துடைத்தெறியப்பட்டுவிட்டது.
பாஜகவுடன் சில காரணங்களுக்காக மறைமுக உறவு வைத்திருந்தவர்கள் கூட, இப்போது பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்துவிட்டதை தமிழக அரசியல் களத்தில் காண முடிகிறது.ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் இன்று பாஜக எதிர்ப்பு நிலையில்தான் உள்ளது.
ஆளும் அ.தி.மு.க.அரசு மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும் கூட, அவ்வப்போது அமைச்சர்களில் சிலரும், முக்கிய புள்ளிகள் சிலரும் மத்திய அரசுக்கு எதிரான ஒரு சில கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லாமல் அவர்களாலும் அரசியல் பண்ண முடியாத நிலை தான் உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் விசயத்தில், தமிழக எம்.பி,க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தை முடக்கும் அளவுக்கு போர்க்கொடி உயர்த்திவருவது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.
ஆனாலும் இந்த விசயத்தில் மேலும் வலிமையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தருவதற்கு ஆந்திரா ஒரு சிறந்த வழியைத் திறந்து விட்டுள்ளது. தங்கள் மாநில நலன் சார்ந்த விவகாரத்திற்காக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வரும் அளவுக்கு ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.
அந்த அளவிற்கான துணிச்சல் நம் எம்.பி.க்களுக்கு இல்லாவிட்டாலும், அந்த தீர்மானத்திற்கு ஆதரவு தருவதன் மூலம் தமிழக மக்களின் தலையாய பிரச்சனைக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
அந்த அளவிற்கான துணிச்சல் நம் எம்.பி.க்களுக்கு இல்லாவிட்டாலும், அந்த தீர்மானத்திற்கு ஆதரவு தருவதன் மூலம் தமிழக மக்களின் தலையாய பிரச்சனைக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக எம்.பி.க்கள் அனைவரும் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்தோ அல்லது கர்நாடகாவிலிருந்தோ தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழகத்தின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டவர்கள்.எனவே தமிழகத்தின் வழ்வாதார பிரச்சனைக்காக அவர்கள் ராஜினாமா செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் மோடி அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், ஆந்திர மாநில எம்.பி.க்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாவது அளிக்க வேண்டும். இதை செய்வதற்கு கூட அவர்கள் முன்வராவிட்டால் வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
--- ஏ.எஸ்.அலாவுதீன்