வியாழன், 29 மார்ச், 2018

முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் தொடக்கம்! March 29, 2018

Image

முதுமலை புலிகள் சரணாலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைகள் சவாரி இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் 22 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. யானை சவாரி, ரோந்து பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த யானைகள் பயன்படுத்தபட்டு வரும் நிலையில், அவற்றிற்கு ஓய்வு அளித்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விதமாக புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்த புத்துணர்வு முகாம் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி தொடங்கி நேற்று மாலை வரை 48 நாட்கள் நடைபெற்றது. புத்துணர்வு முகாமில் யானைகள் கலந்து கொண்டதால், சுற்றுலா பயணிகளுக்காக நடத்தபட்டு வந்த யானை சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

புத்துணர்வு முகாம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து வளர்ப்பு முகாமில் இருந்த கும்கி யானைகள் ரோந்து செல்லுதல், காட்டு யானைகளை விரட்டுதல், களை செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை இன்று முதல் செய்ய தொடங்கி உள்ளன.

குறிப்பாக யானை சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் குறைந்த சுற்றுலா பயணிகளே யானை சவாரி சென்று மகிழ்ந்தனர். இரண்டு கும்கி யானைகள் மட்டும் சவாரிக்கு பயன்படுத்தபட்டன.