வியாழன், 22 மார்ச், 2018

அழிவுப் பாதையை நோக்கி பனை மரங்கள்! March 22, 2018

தமிழ்நாட்டின் மாநில மரமாகிய பனைமரங்கள் வேகமாக அழிந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

தமிழர்களின் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்ந்த, திகழ வேண்டிய பனை மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஏறக்குறைய அனைத்து கிராமங்களிலும் வாராச்சி எனும் மருத்துவ குணமிக்க பனை மரங்களைக் காண முடிந்தது. வீடுகளில்கூட இந்த மரங்கள் வளர்க்கப்பட்டன.  

சங்க கால இலக்கியங்களில் பனைமரத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, அந்த இலக்கியங்களை, இன்று வரை காப்பாற்றித் தந்தவையும் பனை மரங்களே. 

பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன்படுகின்றன. குறிப்பாக பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர் போன்றவை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டவை. 
கடும் வறட்சிக் காலங்களில் கால்நடைகளுக்குத் தீவனமாக பனை ஓலைகள் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும்போது குளுமையான காற்று கிடைக்கும். 

சத்து மிகுதியான பனங்கிழங்கு, மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் என்றெல்லாம் பனைமரத்தின் பயன்பாட்டை சித்த மருத்துவர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். 

உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல் வீடுகள் கட்டுவதற்கும், இம்மரங்கள் துணையாக இருந்தன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தன்மையுடைய பனைமரத்தை காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வளர்த்தனர். 

இவ்வாறு வாழ்கையின் ஓர் அங்கமாக இருந்த பனைமரம் தற்போதைய வாழ்வியலில் அவசியமே இல்லாமல் போய்விட்டது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டங்களில் பனைமரக் காடுகள் அதிகளவில் காணப்பட்டன. 

இப்போது அவை, அழியும் தருவாயை எட்டியிருக்கிறது. முன்பு ஊருக்கு 10 குடும்பங்கள் பனை தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது ஒன்று அல்லது 2 பேர் மட்டுமே இத்தொழில் செய்து வருகின்றனர்.  
திருநெல்வேலி மாவட்டத்தில் பனைமரங்கள் அதிகமுள்ள பகுதிகளில், அவற்றை வெட்டி விற்றுவிட்டு, அந்த நிலத்தில் வாழை உள்ளிட்ட பணப்பயிர்களை பயிரிடும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் இங்குள்ள பனைமரங்கள் வள்ளியூர், ராதாபுரம், ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவுள்ள செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன.

1970-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தில் சுமார் 6 கோடி பனை மரங்கள் இருந்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பனை மரங்களின் எண்ணிக்கை 5 கோடியாக குறைந்திருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்திருப்பதாக கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் தெரிவித்திருக்கிறது. 

1970-களில் இருந்து 40 ஆண்டுகளில் எவ்வளவு பனை மரங்கள் குறைந்தனவோ, அவற்றில் பாதியளவு மரங்கள், கடந்த 4 ஆண்டுகளில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  
மாநில அரசின் மரமான பனை, வேகமாக அழிந்து வருவது கவலைக்குரிய விஷயமாகும்.
தமிழ் இலக்கியங்களில் கற்பக விருட்சமாக வர்ணிக்கப்படும் பனைமரங்களை அழிவிலிருந்து காக்க, தமிழக அரசு சிறப்பு திட்டம் செயல்படுத்தி, 
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  விவசாயிகள், சமூக ஆர்வலர்களின்  கோரிக்கையாக உள்ளது.