
மழலையர் துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாலை 6 மணிக்கு மேல் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என தமிழக தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 17ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில் ஆண்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, அதிகம் வெளிச்சம் தரும் விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால், மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, மழலையர் துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, தமிழக தொடக்க கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது.
அதில், மாலை 6 மணிக்கு மேல் பள்ளிகளில் விழாக்கள் நடத்தக்கூடாது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒலி-ஒளி பொருட்களை தவிர்த்தல் வேண்டும், மாணவர்கள் விரைவில் வெளியேறும் வகையிலான இடங்களில் விழாவை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.