வியாழன், 22 மார்ச், 2018

ஃபேஸ்புக்கை ஒழிப்பதற்கான நேரம் வந்து விட்டது: பகீர் தகவல் March 21, 2018

Image

பிரிட்டனைச் சேர்ந்த தேர்தல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. 

இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் ஒரே நாளில் தனது சந்தை மதிப்பில் 2 லட்சத்து 60,000 கோடி ரூபாயை இழந்துள்ளது. மேலும் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி அந்நிறுதனத்தின் தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு இங்கிலாந்து எம்பிக்கள் குழு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஃபேஸ்புக் பயனாளர்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த விவகாரம் காட்டுத்தீ போல் சமூகவலைதளம் மற்றும் இணையதளத்தில் பரவ அதனை #DeleteFacebook or #BoycottFacebook என்ற ஹாஸ்டகின் கீழ் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இது வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதனிடையே, இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பேஸ்புக்கை ஒழிப்பதற்கான நேரம் வந்து விட்டது என வாட்ஸ் ஆப்பின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் பயனாளர்களின் விபரங்கள் திருடப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து பிரையன் ஆக்டன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்டத்துறை மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இந்தியாவில் ஃபேஸ்புக் வரவேற்கப்படுகிறது எனவும் ஆனால் இதுபோன்ற மக்களின் தகவல் திருட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தகவல் திருட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தேவைப்பட்டால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் இந்தியா வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என திடமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் எஸ்சிஎல் இந்தியா (SCL India) என்ற அரசியல் பிரசார நிறுவனத்துடன் காங்கிரஸ் கட்சி இணைந்து இதுபோன்ற மக்களின் தகவல்களை திருட்டுதனமாக சேகரித்துதான் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தல், வட கிழக்கு மாநில தேர்தல் மற்றும் நடக்கவிருக்கும் கர்நாடகா தேர்தல்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் இணைந்து காங்கிரஸ் இதுபோன்ற செயல்களை செய்து வருவதாக புகார்கள் குவியத் துவங்கியுள்ளதாக கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி என்ன பதில் சொல்லப் போகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக, மோடியும், பாஜகவும்தான் இதுபோன்று தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. பாஜகவின் தொடர் தேர்தல் வெற்றிக்கு இதுவும் ஒருகாரணம் எனவும் தெரிவித்துள்ளது, இந்திய அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

இதனிடையே கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின் இந்திய கிளை நிறுவனமான Ovleno Business Intelligence நிறுவனத்தின் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.