செவ்வாய், 20 மார்ச், 2018

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட முயன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கைது! March 20, 2018

Image

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகம் வந்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட முயன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விஷ்வ ஹிந்து பரிஷத் ரதயாத்திரைக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த யாத்திரையைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின்போது, ரத யாத்திரைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர், முழக்கமிட்டனர், ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உட்பட, நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த யாத்திரையை, எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடச் சென்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவனை, மதுரை மாவட்டம் பாறைப்பட்டியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும்  மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆலங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேபோல், ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற SDPI கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி மற்றும் மாநில துணை தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர், கழுகுமலை பகுதியில் வைத்து, போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.