செவ்வாய், 20 மார்ச், 2018

நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு March 19, 2018

Image

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை நாளை தமிழகம் வருவதையொட்டி, நெல்லை மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராம ராஜ்ஜியத்தை மறுநிர்மாணம் செய்தல், ராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட முழக்கங்களை முன் வைத்து கடந்த மாதம் 13-ந் தேதி அயோத்தியில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் "ராமராஜ்ஜிய ரத யாத்திரை"யை தொடங்கி வைத்தார். 

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளம் வழியாக நாளை காலை திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியே இந்த ரத யாத்திரை தமிழகம் வருகிறது. பின்னர் தென்காசி, ராஜபாளையம், மதுரை,  ராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் வழியே வரும் 23-ம் தேதி திருவனந்தபுரத்தில் முடிகிறது. 

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தமிழகத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரத யாத்திரையின் வருகையைக் கண்டித்து நாளை காலை 8 மணிக்கு செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச் சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், நாளை விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்த செங்கோட்டை செல்ல முயன்றபோது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், செங்கோட்டைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதனையடுத்து, நெல்லை மாவட்டம் முழுவதும் வரும் 23ம் தேதி காலை 6 மணி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.