செவ்வாய், 20 மார்ச், 2018

11வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் March 19, 2018

Image

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் 11வது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் 11வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது. இதனால் நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 11வது நாளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை காவிரி விவகாரத்தில் தங்களது கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றார். ஆனால் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு உறுதியளிக்கும் வரை நாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெற விடமாட்டோம் என்று தெரிவித்தார்.