வியாழன், 29 மார்ச், 2018

"ஸ்கீம்" என்ற வார்த்தையால் முடங்கியிருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் March 28, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில், "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், "ஸ்கீம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. "ஸ்கீம்" என்ற வார்த்தை மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்றும், அது கண்காணிப்பு குழுவை தான் குறிக்கிறது என்றும், கர்நாடக அரசு வாதாடி வருகிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை எனவும் கர்நாடக அரசு கூறி வருகிறது. 

ஆனால், இந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை தான் குறிக்கிறது எனவும், எனவே அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. "ஸ்கீம்" என்ற வார்த்தை தொடர்பாக இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்து நிலவுவதால், மத்திய அரசு அதிகாரிகள், அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலுடன் அது தொடர்பாக ஆலோசித்தனர். 

அப்போது, ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யலாமா என விவாதிக்கப்பட்டது. பின்னர் விளக்க மனு தாக்கல் செய்ய அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அனுமதி அளித்தார். இதையடுத்து, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் விரைவில் விளக்க மனு தாக்கல் செய்கிறது.