செவ்வாய், 20 மார்ச், 2018

தமிழகத்திற்குள் நுழைந்த ராம ரத யாத்திரைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு! March 20, 2018

தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்தது. அதேநேரத்தில், ரத யாத்திரைக்கு எதிராக போராட முயன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராமர் கோவில் கட்ட வேண்டும், இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டும், ராமாயணத்தை பாடத்திட்டமாகக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, கடந்த மாதம் 14ம் தேதி, அயோத்தியில் உள்ள கரசேவக்புரம் என்ற பகுதியிலிருந்து ராமராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது. இது மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா வழியாக தற்போது, நெல்லை மாவட்ட எல்லையான கோட்டை வாசல் வழியாக தமிழகம் வந்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் இந்து ஆன்மீகத் தலைவர்கள் பலர் திரண்டு வரவேற்பு அளித்தனர். பின்னர் ராமஜெய கோஷங்கள் முழங்க அந்த யாத்திரை சென்றது. தமிழகத்தில் இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், திருநெல்வேலி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யாத்திரை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு திமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நூற்றுக் கணக்கானோர் குவிந்தனர். 144 தடை உத்தரவையும் மீறி, அங்கு போராட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்கள் ரத யாத்திரைக்கு எதிராக முழக்கமிட்டனர். தமிழகத்தில் ரத யாத்திரை நடத்தக்கூடாது எனவும் முழக்கமிட்டனர்.

அதேநேரம் செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே, அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர் கூடினர். அதே பகுதியில் ரத யாத்திரைக்கு ஆதரவாக இந்து அமைப்பினரும் கூடியுள்ளனர். ஒரே இடத்தில் இரு தரப்பினரும் கூடி நிற்பதால், அங்கு கடும் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும், அங்கு கூடி நிற்கும் பொதுமக்களை போலீசர் வெளியேற்றி வருகின்றனர். ரத யாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை முழுமையாக அப்புறப்படுத்திய பிறகே, ரத யாத்திரை புறப்படும் என கூறப்படுகிறது. 
Image