புதன், 21 மார்ச், 2018

ஈராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்! March 21, 2018

Image

ஈராக்கில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார்.

இவ்விஷயத்தில், கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்ற பொய்யான வாக்குறுதிகளை சுஷ்மா ஸ்வராஜ் அளித்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அம்பிகா சோனி, சசி தரூர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சுஸ்மா ஸ்வராஜ், டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள அரசு தொடர்ந்து முயன்று வந்ததாகக் குறிப்பிட்டார். அவர்கள் கொல்லப்படவில்லை என ஈராக் அரசு தெரிவித்ததாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கொண்டு நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனையில், 39 பேரும் கொல்லப்பட்டனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உறுதிப்படுத்தாமல், எவ்வாறு உயிரிழந்துவிட்டதாக கூற முடியும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பினார். 

இதனிடையே, ஈராக் நாட்டின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மொசூல் நகரில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் அனைத்து வகையிலும் பாடுபட்டுதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.