செவ்வாய், 20 மார்ச், 2018

ஆன்லைன் பத்திரப்பதிவு குளறுபடிகள் களையப்படும்: தமிழக அரசு March 19, 2018

Image

ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள குளறுபடிகள் 10 நாட்களில் களையப்படும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. 

ஆன்லைன் பத்திரப்பதிவில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்யக்கோரியும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சிவகாசியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர், மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், பதிவுத்துறை தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனவில் அவர் வலியுறுத்தி இருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது நடைமுறையில் உள்ள ஆன்லைன் பதிவு முறையால் உடனடியாக பதிவை மேற்கொள்ள முடியவில்லை என, மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. ஆன்லைன் பத்திரப்பதிவில் 3 நாட்கள் பதிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதால் ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள குறைகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் பத்திர பதிவில் உள்ள குறைகள் 10 நாளில் சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். 

இதையடுத்து, ஆன்லைன் பதிவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, ரியல் எஸ்டேட் சங்க பிரதிநிகளிடமும் விவாதித்து, அவற்றை களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.