தஞ்சையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு கிணற்றை முற்றுகையிட முயன்ற திருமாவளவன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு போராட்ட குழு சார்பில், தஞ்சை-திருவாரூர் சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், 31 இடங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்டி எரிவாயு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர், அம்மாபேட்டையில் இருந்து விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் பேரணியாக சென்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினத்தின் எரிவாயு கிணற்றை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், திருமாவளவன் உட்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.