ஞாயிறு, 18 மார்ச், 2018

பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம்! March 18, 2018

Image

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருகின்றன.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.

மக்களவை நாளை சுமூகமாக நடைபெற்றால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தற்போது 536 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் 274 உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் மத்திய அரசின் முழு பலத்தையும் காட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பாஜக பெற வேண்டியிருக்கும். ஆனால் சிவசேனா, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட சில பாஜகவின் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இதனால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பலன் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி, பாஜக மீது அதிருப்தியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு புது அணி உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Posts: