வாட்ஸ் ஆப் புதிய வெர்ஷனில் ஏற்கனவே டவுன்லோடு செய்யப்பட்டு கேலரியிலிருந்து நீக்கப்பட்ட போட்டோ, வீடியோ என எந்த தரவுகளையும் மீட்டெடுக்கும் புதிய வசதி தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இதற்கு முன்பு சமீபமாக வாட்ஸ் ஆப்பில் செய்யப்பட்ட 2.18.106 மற்றும் 2.18.110 வெர்ஷன் அப்டேட்டுகளில், வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் அனைத்து ஃபைல்களும் சர்வரில் சேமிக்கப்பட்டு இருக்கும். டவுன்லோடு செய்யப்பட்ட ஃபைல்கள் டவுன்லோடு ஆனதும் வாட்ஸ்ஆப் சர்வரிலிருந்து நீக்கப்படும். இது தவிர்த்து டவுன்லோடு செய்யப்படாத ஃபைல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் சர்வரிலிருந்து 30நாட்களுக்குப் பிறகு தானாகவே டெலீட் செய்யப்பட்டு விடும். அதன்பிறகு அவற்றை நாம் டவுன்லோடு செய்ய வேண்டுமெனில் அதனை அனுப்பிய பயனரிடம் மீண்டும் அந்த கோப்பினை அனுப்பச் சொல்லி கேட்க வேண்டும்.
ஆனால் அடுத்த அப்டேட்டான ஆன்ட்ராய்டிற்கான வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.18.113ல் டவுன்லோடு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத அனைத்து ஃபைல்களும் சர்வரில் சேமிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஏற்கனவே டவுன்லோடு செய்யப்பட்ட ஃபைல்கள் போட்டோ, வீடியோ என எதுவாக இருந்தாலும் கேலரியிலிருந்து அவற்றை டெலீட் செய்து விட்டாலும் சரி, வாட்ஸ் ஆப்பிலிருந்து அந்த மெசேஜ் டெலீட் செய்யப்படாத பட்சத்தில் மீண்டும் அந்த ஃபைல்களை எப்பொழுது வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அவை வாட்ஸ் ஆப் சர்வரில் அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த வசதியானது கடந்த 3 மாதங்களில் அனுப்பப்பட்ட ஃபைல்களில் வேலை செய்கிறது. இதன் மூலம் இனி வரும் காலங்களிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். நீண்ட நாட்களுக்கு முந்தைய மெசேஜ்களில் இந்த வசதி வேலை செய்வதில்லை.
இந்த சர்வர் சேமிப்புகள் சாட்டில் உள்ள பயனர்களுக்கிடையே மட்டுமே சேமிக்கப்பட்டு பகிரப்படும். வேறு எவரும் அந்த தரவுகளை அணுக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பயனர்கள் ஃபைல்கள் பரிமாற்ற பாதுகாப்பு குறித்து பயப்படுவதற்கான அவசியம் இல்லை.
இந்த வசதி ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது. ஐஓஎஸ் பயனாளர்களுக்கு விரைவில் இந்த வசதி அப்டேட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.