எஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்திருத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, சென்னையில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
முன்னதாக போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் செ.கு.தமிழரசன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்வதாகவும், 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் கேட்டுக்கொண்டதாகவும் திருமாவளவன் கூறினார்.