செவ்வாய், 24 ஏப்ரல், 2018

இனி தமிழ் மொழியில் ரயில் டிக்கெட் பெறலாம் - புதிய நடைமுறை அமலானது! April 24, 2018

Image

ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே பயணிகள் இனிமேல் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

ஆரம்ப கட்டமாக சென்னை சென்ட்ரல், திருச்சி, சேலம், மதுரை ஆகிய 4 ரயில் நிலையங்களில் தமிழில் டிக்கெட்டுகள் கிடைக்கும் என்றும், காலப் போக்கில் மற்ற ரயில்நிலையங்களிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
இதே போன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 4 நிலையங்களில் மலையாள மொழியிலும் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் முதன்முதலாக கடந்த மார்ச் மாதம் இந்த முறை நடைமுறைக்கு வந்தது. பெங்களூரு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான டிக்கெட்டில் ஊர் பெயர்களை கன்னட மொழியில் அச்சிட்டு வழங்கப்பட்டது அந்த மாநில மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் பொது பிரிவு ரயில் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட்டுகளில் ஊர் பெயர்கள் தமிழில் அச்சிட்டு வழங்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.