வியாழன், 19 ஏப்ரல், 2018

தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! April 19, 2018

லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை தமிழக அரசு இன்றே தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.  

2013-ம் ஆண்டு அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டநிலையில், 20 மாநிலங்கள் லோக் ஆயுக்தாவை அமைத்தன. ஆனால் தமிழகம், தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்தது. 

அதில், மத்திய அரசு  லோக்பால் அமைப்பை உருவாக்கித்தர காத்திருப்பதாகவும், அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசுக்கும், இதற்கும் தொடர்பில்லை எனக் கூறினர். லோக் ஆயுக்தா அமைப்பதற்கு மத்திய அரசுக்காக காத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். 

தமிழகத்தால் சுயமாக முடிவு எடுக்க முடியாத என வினா எழுப்பிய நீதிபதிகள், காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்றும், அதற்கான பணியை இன்றே தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Image