
உத்தரபிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, அந்த வழித்தடத்தில் வந்த ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. மேலும் பள்ளி வாகனம் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டது.
இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 13 குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த குழந்தைகளில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.பள்ளி குழந்தைகள் உயிரிழப்புக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், உத்தரபிரதேச பள்ளி குழந்தைகள் விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாக கூறியுள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரயில்வே சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.