பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பந்தல்குடி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்மலா தேவியின் பின்னணியில் உள்ள உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். மதுரை பல்கலைக்கழகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரும், ஜாக் அமைப்பினரும் கலந்து கொண்டனர். பேராசிரியை மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் எனவும், ஆளுநரை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், பேராசிரியை நிர்மலா தேவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியை நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.