வெள்ளி, 27 ஏப்ரல், 2018

மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் - கமல்ஹாசன் April 27, 2018

Image
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு இழைத்துள்ள அநீதியை தமிழர்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சமீப காலமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. அதற்காக தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் என மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை 6 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அவ்வாறு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மீண்டும் கால தாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை சுட்டிகாட்டியுள்ள கமல்ஹாசன்,  இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என்றும்  தெரிவித்துள்ளார்.