கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கடல் சீற்றம் தொடரும் நிலையில், மேலும் இரு கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கன்னியாகுமரி மேற்கு கடற்கரைப் பகுதியில் 2-ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
ஏற்கனவே, குளச்சல், வாணியக்குடி, குறும்பனை, வாணிவக்குடி, தேங்காய்ப்பட்டணம் ஆகிய பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. தற்போது மண்டைக்காடு, புதூர் ஆகிய கிராமங்களிலும் கடல் நீர் புகுந்துள்ளது.
ராமந்துறை, தேங்காய்பட்டணம் ஆகிய பகுதிகளில் எழுந்த ராட்சத அலைகளால் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 நாட்டுப் படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.
மண்டைக்காடு புதூரில் 7.82 கோடி செலவில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.