
12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
போக்சோ சட்டத்தின்படி, 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபருக்கு, அதிகபட்ச தண்டனையாக ஆயுள் முழுவதும் சிறையிலேயே அடைத்து வைக்க சட்டத்தில் இடமுள்ளது. காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, மத்திய அமைச்சரவை போக்சோ சட்டத்தில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்தால் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.
இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதேபோல், 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை கூட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தினாலும், மரண தண்டனை விதிக்க அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.