ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது : ராகுல் காந்தி



Image
இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு தலைநகர் டெல்லியில் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன போதிலும், தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், கருப்புப் பணம் மீட்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

உச்சநீதிமன்றம் உட்பட ஜனநாயகத்தின் உயர்பீடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, நாடாளுமன்றமும் இயங்க அனுமதிக்கப்படுவதில்லை என விமர்சித்தார்.

நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக தெரிவித்த ராகுல்காந்தி, அதனைப் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.