புதன், 25 ஏப்ரல், 2018

இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் ரத்தக்கறை காங்கிரஸ் கைகளிலும் படிந்திருக்கிறது - சல்மான் குர்ஷித் April 24, 2018

கிரஸ் ஆட்சியின் போது மதக்கலவரங்களை கட்டுப்படுத்த கட்சி தவறியதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்திடம் முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது 1984 சீக்கிய கலவரம், பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களின் போது, காங்கிரஸ் கட்சியின் கரங்களில் படிந்த முஸ்லிம்களின் ரத்தக் கறையை காங்கிரஸ் கட்சி எவ்வாறு போக்கும் என்று Amir Mintoee என்ற மாணவர் தனது கேள்வியை சல்மான் குர்ஷித்திடம் முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், “நானும் காங்கிரஸின் ஒரு அங்கம் என்பதால், இதனை நான் ஒத்துக்கொள்கிறேன், எங்களின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக் கறை படிந்துள்ளது. அதே நேரத்தில் உங்கள் கரங்களில் ரத்தக் கறை படியக்கூடாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

நீங்கள் அவர்களை தாக்கினால் உங்கள் கரங்களிலும் ரத்தக் கறை படியும், வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும், இதே பல்கலைக்கழகத்திற்கு நீங்கள் 10 ஆண்டுகள் கழித்து வரும் போது இதே கேள்வியை வேறு யாரும் உங்களைப் பார்த்து கேட்டுவிடாத அளவிக்கான சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்” என்று சல்மான் குர்ஷித் அந்த மாணவருக்கு பதிலளித்தார்.

சல்மான் குர்ஷித்தின் இந்த பதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான பி.எல்.பூனியா சல்மான் குர்ஷித்தின் கருத்தை காங்கிரஸ் கட்சி நிராகரிக்கிறது என்றார்.
 
தனது கருத்தால் கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சல்மான் குர்ஷித், “இந்த விவகாரத்தில் ஒரு மனிதனாக எனது கருத்தை தெரிவித்தேன், நான் காங்கிரஸின் பிரதிநிதி அல்ல, நான் தான் காங்கிரஸ், எனவே நான் என்ன கூறினேனோ அதனை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்” என்றார்.

அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த போது அது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.