தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து தற்போது இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராகவும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக குஷ்பு இருந்து வருகிறார்.
சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, தன் அரசியல் கருத்துகளை விமர்சனம் செய்பவர்களுக்கும், தன் மீது தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவர்களுக்கும் பதிலடி கொடுப்பது வழக்கம். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை “khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP..”"குஷ்பு சுந்தர்.. பாஜகவிற்கு நகத் கான்" என்று திடீரென்று மாற்றியுள்ளார்.
ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்து கொண்டு குஷ்பு என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக பேசி வருகிறார் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடியாக தனது ட்விட்டர் பெயரில் நகத்கான் என்ற தனது இயற்பெயரையும் சேர்த்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, குழந்தை நட்சத்திரமாக தனது 7வது வயதில் அறிமுகமானதிலிருந்து தனது பெயர் குஷ்பு தான் என்று தெரிவித்துள்ளார். தனது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களில் தனது பெயர் குஷ்பு என்கிற நகத் கான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இயக்குநர் சுந்தர்.சி யை 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டதிலிருந்து தனது பெயரை குஷ்பு சுந்தர் என்றே பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பெயர் நகத் கான் என்பது எல்லாருக்கும் தெரியும் என்றும், தனது பெயரை கண்டு பிடிப்பதில் நேரத்தை வீண் செய்ய வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதோடு, இதற்கு முன்பு யாரும் இதை பிரச்சனையாக மாற்றியதில்லை என்றும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்ற பிரச்சனை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது அடையாளம் எளிதானது என்று தெரிவித்துள்ள குஷ்பு, அடிப்படையில் நான் மனிதன், என் உடலில் சிவப்பு ரத்தம் தான் ஓடுகிறது என்றும் பாஜகவினர் போல் அல்லாமல் தனக்கு 6 அறிவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.