
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்கள் படிக்க, 25 சதவீத இடஒதுக்கீடு முறை, கடந்த 2013ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, 25% இடஒதுக்கீட்டின் கீழ் தங்களது குழந்தைகளை சேர்க்க இன்று முதல் மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருப்போர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்க்க முடியும் என்றும், அனைத்து இ-சேவை மையங்கள், கல்வித்துறை அலுவலகங்களில் பெற்றோர் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் போது, குழந்தைகளின் புகைப்படம், பிறந்த சான்றிதழ், வீட்டு முகவரிக்கான அத்தாட்சி சான்றிதழ் சமர்பிக்க தாசில்தாரிடம் பெறப்பட்ட ஜாதி சான்றிதழ், அசல் மற்றும் நகல் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள், ஆன்லைன் மூலம் பதிவேற்றப்படுகிறது. விண்ணப்பிக்கும் போது இல்லாத ஆவணங்கள், மே 29ஆம் தேதிக்குள் சமர்பித்து, உரிய பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேரிலோ அல்லது, 0422- 2391062 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.